இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி

கேப்டவுன்: கேப்டவுனில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி  பெற்றது. டாசில் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே இலங்கை ஓபனர் டிக்வெல்லா, ஸ்டேன் வீசிய  பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து, டக்-அவுட் ஆனார்.

அவருக்கு பதிலாக ஆட வந்த குசல் மெண்டிசும் டக்-அவுட் ஆனார். 2வது ஓவரை வீசிய ரபாடா  பந்தில், அவர் சிபம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் 2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 7 ரன்கள் என தடுமாறியது இலங்கை. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காமிந்து மெண்டிசும், அவிஷ்காக பெர்னாண்டோவும் சற்று தாக்குப்பிடித்தனர்.

 இருவரும் சேர்ந்து 35 ரன்கள் எடுத்தனர்.

16  ரன்களில் பெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேறியதும், அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இலங்கை  அணி 134 ரன்கள் எடுத்தது. காமிந்து மெண்டிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க பவுலர்களில் பெஹலுக்வாயோ 3 விக்கெட் வீழ்த்தினார்.   135 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுக்க, போட்டி டையில் முடிந்தது.   இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 1 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 15 ரன் எடுத்தார்.

அடுத்து தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான்  தாஹிர் சிறப்பாக பந்து வீசி, 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

.

மூலக்கதை