இணையதள வணிகத்திற்கும் நியூட்ரினோ திட்டத்திற்கும் தடை விதிக்க வலியுறுத்தப்படும் : மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

தினகரன்  தினகரன்
இணையதள வணிகத்திற்கும் நியூட்ரினோ திட்டத்திற்கும் தடை விதிக்க வலியுறுத்தப்படும் : மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை : மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ம் தேதி அறிவித்தது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையை தொடங்கி உள்ளனர். இதனிடையே தேர்தலை முன்னிட்டு ஒவ்வோரு அரசியல் கட்சிகள் அவ்வப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. நேற்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். தற்போது 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மறுமலர்ச்சி இயல் திட்டம் என்ற பெயரில் வைகோ வெளியிட்டார். சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் வைகோ வெளியிட்டார். பின்னர் பேசிய வைகோ, இந்த ஆண்டு மாற்றங்களின் ஆண்டாக இருக்கும் என்று கூறினார். மேலும் 1500 ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என அதிமுக அறிவிப்பு செய்துள்ளது என்றும் ஆனால் பணம் வாங்கி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது என்றும் வைகோ கூறினார். பூரண மதுவிலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, அணு உலை பூங்காவை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் உள்ளிட்டவை மதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையின் முழு விவரம் *முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கட்டும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தப்படும் *விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுப்போம் *கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம் *மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018-யை திரும்பபெற வலியறுத்தப்படும் *இணையதள வணிகத்திற்கு தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும், சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்தப்படும். *தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் *பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் *கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் *சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம் *ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவோம் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை