வழிபாட்டு தலங்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது : தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
வழிபாட்டு தலங்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது : தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

டெல்லி : இந்தியாவில் 17வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவிடப்படும் தொகுதிகளைக் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனெவே முடிவு செய்துள்ளது. மேலும் மார்ச் 15ம் தேதி நடைபெற்ற தேர்தல் புலனாய்வுக்குழுக் கூட்டத்தில், தேர்தலுக்காக சட்டவிரோத பணப்புழக்கம் நடைபெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை பரப்புரைக்காக பயன்படுத்தக்கூடாது என்று கட்சிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பல்வேறு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் அமையும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மசூதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதை சிறப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த புதிய கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. முக்கிய விவாதமாக மாறியிருக்கும் சபரிமலை பெயரால் வாக்கு வேட்டை நடத்தக்கூடாது என கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை