பாண்ட்யாவை கவனிங்க... * ஜாகிர் கான் ‘அட்வைஸ்’ | மார்ச் 19, 2019

தினமலர்  தினமலர்
பாண்ட்யாவை கவனிங்க... * ஜாகிர் கான் ‘அட்வைஸ்’ | மார்ச் 19, 2019

 மும்பை: ‘‘முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாண்ட்யாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,’’ என ஜாகிர் கான் தெரிவித்தார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 25. இந்தியாவின் அடுத்த ‘கபில்தேவ்’ என வர்ணிக்கப்பட்டார். ஆனால் அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, அடுத்து ஆஸ்திரேலிய தொடர் என, கடந்த ஆறு மாதங்களில் இரு முறை முதுகுப்பகுதி காயம் காரணமாக விலகினார்.

தற்போது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க தயாராக உள்ளார். இதுகுறித்து மும்பை கிரிக்கெட் அணியின் இயக்குனர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் கூறியது:

ஆசிய கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவை கவனித்தேன். முதுகுப்பகுதி காயம் ஏற்படக் கூடிய சிக்கல் இருப்பதை அறிந்து வருத்தப்பட்டேன். இது முதன் முறை என்பதால் இதில் இருந்து மீண்டு விடலாம் எனத் தெரிந்து கொண்டேன். ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற பிரச்னை எனக்கும் ஏற்பட்டது. வரும் ஐ.பி.எல்., தொடரில் ஹர்திக் பாண்ட்யாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக மும்பை அணியின் ‘பிட்னஸ்’ பயிற்சியாளர்களுடன் ஆலோசித்துள்ளார்.

இவ்வாறு ஜாகிர் கான் கூறினார்.

மூலக்கதை