இந்தியாவின் எதிர்காலம் ரிஷாப் * முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டு | மார்ச் 19, 2019

தினமலர்  தினமலர்
இந்தியாவின் எதிர்காலம் ரிஷாப் * முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டு | மார்ச் 19, 2019

 புதுடில்லி: ‘‘என்னைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ரிஷாப் பன்ட் தான்,’’ என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான டில்லி அணி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங், ஆலோசகராக இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியது:

ரிஷாப் பன்ட் கடினமாக போராடக் கூடியவர். வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய சொத்தாக (தவிர்க்க முடியாத வீரராக) இருப்பது உறுதி. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்க பொருத்தமான வீரராக இருப்பார். என்னைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ரிஷாப் பன்ட் தான்.

ஏனெனில் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் யாராக இருந்தாலும் சரி, உலக கிரிக்கெட்டில் சாதிக்கும் வீரராக இருப்பார். ரிஷாப் பன்ட்டை 4வது இடத்தில்  களமிறக்கினால் அணிக்கு தேவையான ரன்களை எடுத்து தருவார். இதற்கான தகுதி அவரிடம் உள்ளது. தவிர களத்தில் அதிக நேரம் நிலைத்து நின்று விளையாடவும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து அதே இடத்தில் களமிறங்க இவருக்கு அனுமதி தந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரராகி விடுவார்.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

பாண்டிங் கூறுகையில்,‘‘ கடந்த நான்கு ஆண்டுகளாக ரிஷாப் பன்ட்டை பார்த்து வருகிறேன். பயிற்சிக்கு முதல் வீரராக வந்து விடுவார். நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார். வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய வீரர் இவர் தான். இந்திய அணிக்கு இவர் உலக கோப்பை வென்று தருவார்,’’ என்றார்.

மூலக்கதை