நான்காவது வீரராக விஜய் * இந்திய அணி புதிய முடிவு | மார்ச் 19, 2019

தினமலர்  தினமலர்
நான்காவது வீரராக விஜய் * இந்திய அணி புதிய முடிவு | மார்ச் 19, 2019

 புதுடில்லி: உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு நான்காவது இடம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

இங்கிலாந்தின் லண்டனில் வரும் மே 30ல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்., 15 முதல் 20ம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. பெரும்பாலான வீரர்கள் அணியில் இடம் பெறுவது உறுதி என்ற நிலையில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்துக்கு இன்னும் சரியான வீரர் கண்டறியப்படவில்லை. 

தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, ரிஷாப் பன்ட் என வரிசையாக தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர். இதனால் வரும் உலக கோப்பை தொடரில் இந்த இடத்தை சோதனை களமாக இந்தியா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் உலக கோப்பை தொடரில் பெரும்பாலும் இந்தியா சார்பில் ஏதாவது ஒரு புது திட்டத்தை அறிமுகம் செய்யப்படும். 2003 தொடரில் லட்சுமணை நீக்கிவிட்டு தினேஷ் மோங்கியாவை ‘சுழற்பந்து வீச்சு’ ஆல் ரவுண்டராக பயன்படுத்தினர். 2011ல் யுவராஜ் சிங் ஐந்தாவது பவுலரானார். இவர் 15 விக்கெட் வீழ்த்தி, கடைசியில் தொடர் நாயகன் ஆனார்.

இதுபோல வரும் தொடரில் தமிழகத்தில் வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கரை, நான்காவது வீரராக களமிறக்குவர் என கூறப்படுகிறது. ஏனெனில் வெலிங்டன் (90 ரன், எதிர்–நியூசி.,) போட்டிக்குப் பின் அம்பதி ராயுடு பெரியளவில் சோபிக்கவில்லை. அதேநேரம் விஜய் சங்கர் துணிச்சலாக விளையாடுவது, குறைந்தது ஐந்து ஓவர் பவுலிங் செய்வது போன்றவை இவருக்கு சாதகமாக உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா 7வது இடத்தில் களமிறங்கி போட்டியை ‘பினிஷிங்’ செய்து தர உதவலாம். தவிர ஹர்திக், விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இணைந்து ஐந்தாவது பவுலர் பணியை கவனித்துக் கொள்வர் என நம்பப்படுகிறது. 

மூலக்கதை