தேர்தல் பிரசாரம் மும்முரம்: விமானங்கள், ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்புல்

தினகரன்  தினகரன்
தேர்தல் பிரசாரம் மும்முரம்: விமானங்கள், ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்புல்

மும்பை: மக்களவை பொது தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சிறிய விமானம், ஹெலிகாப்டர்களில் கட்சி தலைவர்கள் சென்று  பிரசாரம் செய்ய புக்கிங் செய்யப்பட்டதால், பெரும்பாலான நிறுவனங்களில் ‘ஹவுஸ்புல்’ போர்டுகள்தான் தொங்குகின்றன. தேர்தல் பிரசாரத்துக்கு எளிதில் பல்வேறு இடங்களுக்கு சென்று வர விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஒரு பைலட் பிளஸ் 5 கிங் ஏர் சி90, 2 பைலட்கள் பிளஸ் 8 கிங் ஏர் பி200 ஆகிய சிறிய ரக ஹெலிகாப்டர்களுக்கு ஏக கிராக்கி. இந்தியாவில் இதுபோன்ற ரக ஹெலிகாப்டர்கள் 24 இருக்கலாம். ஆனால், மே மாதம் 3வது வாரம் வரையில் இந்த ஹெலிகாப்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 மணி நேரத்திற்கு என  45 முதல் 60 நாட்களுக்கு சுமார் 50 சதவீத ஹெலிகாப்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில் பா.ஜ. கட்சியினர் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் என்று விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  ஹெலிகாப்டர் வகையை பொறுத்து வாடகை ஒரு மணி நேரத்திற்கு 50,000 முதல் 3,50.000 வரையில் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வாடகைக்கு எடுக்கப்படுகிறது. ஹெலிகாப்டரை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் வாடகை செலுத்த வேண்டும். சாதாரணமாக 15 முதல் 30 நிமிடங்கள் பயண நேரமாக இருக்கும் என்று மும்பையை சேர்ந்த விமானத் துறை நிபுணர் பிரதீப் தம்பே தெரிவித்தார்.

மூலக்கதை