நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பி.சி.கோஸ் நியமனம்: 8 உறுப்பினர்களும் தேர்வு

தினகரன்  தினகரன்
நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பி.சி.கோஸ் நியமனம்: 8 உறுப்பினர்களும் தேர்வு

புதுடெல்லி: நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மத்தியில் லோக்பால் அமைப்பை கொண்டுவர கடந்த 2014ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. லோக்பால் விசாரணை வளையத்திற்குள் பிரதமரும் வருகிறார். ஆனால், லோக்பால் அமைக்காமல் கடந்த 5 ஆண்டாக மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு கடந்த ஆண்டு தான், லோக்பால் உறுப்பினர்களை ேதடுவதற்கான குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் 10 நாள் கெடு விதித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில், லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் தேர்வு ெசய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, இந்த அமைப்பின் சட்டத்துறை அல்லாத உறுப்பினர்களாக எஸ்எஸ்பி முன்னாள் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிரா முன்னாள் தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின், மகேந்தர் சிங், இந்திரஜித் பிரசாத் கவுதம் ஆகியோரும் சட்டத்துறை உறுப்பினர்களாக நீதிபதிகள் திலீப் போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை