பெங்களூருவில் ராகுல் பங்கேற்ற கலந்தாய்வில் ‘மீண்டும் மோடி’ கோஷத்தால் பரபரப்பு...ஐடி ஊழியர்களுடன் காங். தொண்டர்கள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூருவில் ராகுல் பங்கேற்ற கலந்தாய்வில் ‘மீண்டும் மோடி’ கோஷத்தால் பரபரப்பு...ஐடி ஊழியர்களுடன் காங். தொண்டர்கள் மோதல்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த நாகவரா பகுதியில் மான்யதா தகவல் தொழில் நுட்பப்பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் 68 நிறுவனங்கள்  செயல்பட்டுவருகின்றன.

இதில் 1. 5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். குறிப்பிட்ட சில தொழில்நுட்ப அறிஞர்கள், தொழில்முனைவோர்,  தகவல்தொழில்நுட்ப ஊழியர்களுடன் அத்துறை சம்பந்தமான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அவர்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க, அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை 5. 30 மணிக்கு ராகுல்காந்தி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

ராகுலுடன் பேச ஒருசிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.   இதனால் அதிருப்தி அடைந்த சில தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், ‘மீண்டும் மோடி’ என்று கோஷமிட்டனர்.

மேலும், ராகுல் காந்தியுடன் கலந்துரையாட  அனுமதிக்காததால், இதுபோன்று அவர்கள் நடந்து கொண்டனர். பாஜவினர் தான், ‘மீண்டும் மோடி’ முழக்கத்தை எழுப்ப தகவல் தொழில் நுட்ப ஊழியர்களை  தூண்டிவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஒருகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் காங்கிரஸ்  தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. திடீெரன பதற்றம் நிலவியதால், அங்குவந்த போலீசார்  ‘மீண்டும் மோடி’ கோஷம் எழுப்பிய ஊழியர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

அதனால், கலந்தாய்வில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



.

மூலக்கதை