மலேசியாவில் இருந்து மனித கருவை கடத்தி கொண்டு வந்தவர் கைது

தினகரன்  தினகரன்
மலேசியாவில் இருந்து மனித கருவை கடத்தி கொண்டு வந்தவர் கைது

மும்பை: மலேசியாவில் இருந்து மனித கருவை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து வந்த பார்த்திபன் துரை என்பவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது அவரிடம் நைட்ரஜன் கண்டெய்னர் ஒன்றில் மனித கருவை இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மனித கருவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி தேவைக்காக மட்டுமே மனித கருவை இறக்குமதி செய்யலாம். ஆனால் பார்த்திபனிடம் மனித கருவை கொண்டு வருவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி பார்த்திபன் அந்தேரியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்று ரூம் எடுத்து அங்கிருந்து குறிப்பிட்ட ஒரு நபருக்கு தகவல் கொடுத்தார். அந்த நபர் மனித கருவை பாந்த்ராவில் உள்ள இந்தோ நிப்பான் கிளினிக்கில் டெலிவரி செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்தோ நிப்பான் கிளினிக்கின் நிறுவனர் கோரல் காந்திக்கு வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து கோரல் காந்தி இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தாங்கள் மனித கருவை இறக்குமதி செய்யவில்லை என்று வாதிட்டார். ஆனால் வருவாய் புலனாய்வுத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மனித கருவை கடத்தி வந்த பார்த்தின் துரை மொபைலில் இந்தோ நிப்பான் கிளினிக்கில் மனித கருவை டெலிவரி செய்யும்படி மெசேஜ் இருந்ததாக வாதிட்டார். இதையடுத்து இது தொடர்பான விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் அதுவரை டாக்டர் கோரலை கைது செய்ய தடை விதித்தது. மலேசியாவில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் இருந்து இந்த உரைநிலையில் வைக்கப்பட்ட மனித கரு மும்பைக்கு கடத்திக்கொண்டு வரப்பட்டுள்ளது. மலேசியாவில் இருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையத்தை இந்தியர் ஒருவர்தான் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் செலவு குறைவு என்பதால் மலேசியாவில் இருந்து மனித கருவை கொண்டு வந்து வாடகைத்தாய் கர்ப்பப்பையில் செலுத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. பார்த்திபன் இது போன்று இதற்கு முன்பு 10 முறை மனித கருவை மலேசியாவில் இருந்து மும்பைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை