அடுத்த தலாய் லாமாவை நாங்கள்தான் தேர்ந்தெடுப்போம்: சீனா மிரட்டல்

தினகரன்  தினகரன்
அடுத்த தலாய் லாமாவை நாங்கள்தான் தேர்ந்தெடுப்போம்: சீனா மிரட்டல்

பீஜிங்: சீன அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவரே திபெத் புத்த மதத்தின் அடுத்த தலாய் லாமா என்று மிரட்டல் விடுத்துள்ள சீன அரசு, அடுத்த தலாய் லாமாவாக இந்தியாவை சேர்ந்தவரை பிரகடனம் செய்யும் தலாய் லாமாவின் விருப்பத்தையும் நிராகரித்துள்ளது. தலாய் லாமாக்கள் கெலுக் பிரிவின் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறக்கும் குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறுபிறவி எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன்படி, தற்போது 14வது தலாய் லாமாவாக இருக்கும் டென்சின் கியாட்சோ தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராக கருதப்படுகிறார். இந்த சூழ்நிலையில், அடுத்த தலாய் லாமா இந்தியாவில் இருந்து தேர்த்தெடுக்கப்படுவார். சீன பிரதிநிதிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படாது என தலாய் லாமா தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சீன அரசு, அடுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது. திபெத் மக்களை மத ரீதியாக கட்டுப்படுத்தவே சீனா இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங், திபெத்திய புத்த மதத்தில் மறுபிறப்பு என்பது வேறுபட்டது. அவர்களுக்கென தனித்துவமான சடங்குமுறைகள் உள்ளன. சீன அரசு மத நம்பிக்கைகளில் சுதந்திரம் அளிக்கும் கொள்கை உடையது. அதேசமயம், திபெத்திய புத்த மத மறுபிறப்பு உள்ளிட்ட மத விவகாரங்களில் சீன அரசுக்கென ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. றுபிறப்பின்படி, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா கூட மத பாரம்பரியங்களின் அடிப்படையில் சீன அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே. எனவே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் சீன அரசின் விதிகள், ஒழுங்குமுறைகள், மத பாரம்பரியங்களுக்கு உட்பட்டது’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை