ரியல் எஸ்டேட் வரி குறைப்பு; ஏப்., 1ல் அமல்

தினமலர்  தினமலர்
ரியல் எஸ்டேட் வரி குறைப்பு; ஏப்., 1ல் அமல்

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ள புதிய வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளுக்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஏப்., 1 முதல், ரியல் எஸ்டேட் துறைக்கான, ஜி.எஸ்டி.,யை குறைக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், ஏப்., 1 முதல், கட்டுமான நிறுவனங்கள்,புதிய, ஜி.எஸ்.டி.,க்கு மாறுவது தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

வரி சுமை குறையும்:
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதுபோல, குறைந்த விலை வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய கூட்டத்தில், கட்டுமான நிறுவனங்கள், புதிய வரி விகிதங்களுக்கு மாறுவது தொடர்பான நடைமுறைகள் குறித்து விவாதித்து, ஒப்புதல் வழங்கப்பட்டது.ஏப்., 1ல் புதிய விதிமுறைகளுடன், குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது.

கட்டுமான நிறுவனங்கள் விரும்பினால், தற்போது நடைபெற்று வரும் கட்டுமான திட்டங்களை, புதிய வரி திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.புதிய விதிமுறையின்படி, ஏப்ரல் முதல் கட்டுமான நிறுவனங்கள், செங்கல், சிமென்ட் போன்ற மூலப்பொருட்களில், 80 சதவீதத்தை, பதிவு பெற்ற முகவர்களிடம் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.வணிக வளாகங்களில், 15 சதவீத பரப்பு, குடியிருப்பாக வகைப்படுத்தி, அதற்கேற்ப, ஜி.எஸ்.டி., கணக்கிட வேண்டும் என, விதிமுறை கூறுகிறது. இதனால், கட்டுமான நிறுவனங்களுக்கு, வணிக வளாக திட்டங்களுக்கான வரிச் சுமை குறையும்.

உள்ளீட்டு வரி:

குறைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தின்படி, கட்டுமான நிறுவனங்கள், உள்ளீட்டு வரிப் பயனை பெற முடியாது. இது, ஏப்ரலில் துவங்கும் கட்டுமான பணிகளுக்கு பொருந்தும்.அதேசமயம், ஏற்கனவே நடைபெற்று வரும் குடியிருப்பு பணிகள் தொடர்பான உள்ளீட்டு வரிப் பயனை, கட்டுமான நிறுவனங்கள் பெறுவதற்கு, வழி வகை செய்யப்பட்டுள்ளது.

விகிதாச்சார முறையில் இப்பயனை கட்டுமான நிறுவனங்கள் பெறலாம் என, விதிமுறை கூறுகிறது. இந்த அம்சம் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் மேலும் தெளிவுபடுத்தும் என, தெரிகிறது.பழைய குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளீட்டு வரிப் பயன் கிடைக்கும் அதேவேளையில், புதிய திட்டங்களுக்கு, குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. இதனால், கட்டுமான நிறுவனங்கள், வீடு வாங்குவோர் என, இரு தரப்பினரும் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

குடியிருப்பு மதிப்பு:
பெருநகரங்கள் மற்றும் நகரங்களில், 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகள், குறைந்த விலை குடியிருப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு, ‘கார்பெட் ஏரியா’ எனப்படும், புழங்கும் பகுதி முறையே, 90 மற்றும் 60 சதுர மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை