‘மைன்ட்ரீ நிறுவனத்தை இணைக்க மாட்டோம்’; எல்., அண்டு டி., நிறுவனம் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
‘மைன்ட்ரீ நிறுவனத்தை இணைக்க மாட்டோம்’; எல்., அண்டு டி., நிறுவனம் அறிவிப்பு

மும்பை: ‘தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை’ என, எல்., அண்டு டி., நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம், எல்., அண்டு டி., நிறுவனம், மைன்ட்ரீ நிறுவனத்தின், 67 சதவீத பங்குகளை, 10 ஆயிரத்து, 733 கோடி ரூபாய் முதலீட்டில் வாங்குவதாக அறிவித்தது.அன்றே, ‘கேப் காபி டே’ நிறுவனர், வி.ஜி.சித்தார்த்திடம் இருந்து, மைன்ட்ரீ நிறுவனத்தின், 20.3 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. பங்கு ஒன்றின் விலை, 980 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது, சந்தை விலையை விட, 20 ரூபாய் அதிகம்.அத்துடன், பங்கு தரகர்களிடம் இருந்து, மைன்ட்ரீ நிறுவனத்தின், 15 சதவீதபங்குகளை, இதே விலைக்கு வாங்கவும், எல்., அண்டு டி., ஒப்பந்தம் செய்தது. இது தவிர, வெளிச் சந்தையில், இதே விலைக்கு, 32 சதவீத பங்குகள் வாங்கப்படும் எனவும் அறிவித்தது.

அதிர்ச்சி:
இதனால், மைன்ட்ரீ நிறுவனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ‘கடந்த, 20 ஆண்டுகளாக சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட நிறுவனத்தை, எல்., அண்டு டி., திடீரென கையகப்படுத்துவதை ஏற்க முடியாது‘இது, ஐ.டி., துறைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தல். இதனால், மைன்ட்ரீ நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மாறும்; பங்கு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவர்’ என, அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில் நேற்று, எல்., அண்டு டி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, எஸ்.என்.சுப்ரமணியன் கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு முன், சித்தார்த் எங்களை அணுகி, பங்குகளை விற்பதாக கூறினார். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். மைன்ட்ரீ நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், எங்களுடன் நட்புடன் உள்ளனர்.மைன்ட்ரீ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கினாலும், அதன் செயல்பாடுகளில், எல்., அண்டு டி., தலையிடாது. தற்போது அந்நிறுவனத்தை, எல்., அண்டு டி., நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மைன்ட்ரீ எப்போதும் போல சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எல்., அண்டு டி., குழுமம், பொறியியல், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில், எல்., அண்டு டி., இன்போடெக் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துடன், சில காலம் கழித்து, மைன்ட்ரீ இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த மதிப்பு:

‘இன்போசிஸ், விப்ரோ, லுசன்ட்’ போன்ற, ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றிய சிலர் இணைந்து, 1999ல், ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை உருவாக்கினர். 11 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது, 14 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தை துவக்கி, முதல் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த, அசோக் சூட், 2011ல், பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார். தற்போது நிறுவனர்கள் வசம், 13 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன.

மூலக்கதை