மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு

தினமலர்  தினமலர்
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு

ஒரு சினிமாவை தியேட்டர்களில் திரையிட பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பிலிம் மூலம் திரையிடும் முறைதான் இருந்தது. 2010ம் ஆண்டு முதல் டிஜிட்டல் திரையிடல் பரவலானது. அப்போது அந்த தொழில்நுட்பத்தைப் புகுத்த தியேட்டர்களில் திரையிடும் கட்டணமாக ஒரு படத்திற்கு 20000 ரூபாய் கட்டணம், டிஜிட்டல் நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு விஷுவல் பிரின்ட் கட்டணம் என்று பெயர், சுருக்கமாக விபிஎப் கட்டணம்.

ஒப்பந்தம்
ஒரு படத்தை எத்தனை தியேட்டர்களில் திரையிடுகிறோமோ அதற்கேற்ப கட்டணத்தின் மொத்த தொகை அமையும். இந்தத் தொகையை 2015ம் ஆண்டு வரைதான் வாங்க வேண்டும் என்று முதலில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டார்களாம். பின்னர் வாய்மொழி பேச்சு வார்த்தையின் மூலம் 2017 வரை நீட்டித்திருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தை இந்தியத் திரைப்படங்களுக்கு மட்டும்தான் வாங்குவார்களாம். ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்களுக்கு இந்த விபிஎப் கட்டணம் கிடையாதாம். ஹாலிவுட் டப்பிங் படமாக இருந்தாலும் விலக்கு அளிக்கிறார்களாம்.

தயாரிப்பாளர் ரோனி வழக்கு
அதன் காரணமாக இந்தியப் படங்களுக்கும், மாநில மொழிப் படங்களுக்கும் படங்களைத் திரையிட கடுமையான தடங்கல் ஏற்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்த பாரபட்சமான கட்டணத்தை எதிர்த்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா, இந்திய போட்டிகள் ஆணையத்தில்(சிசிஐ) வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

மலைக்க வைக்கும் விபிஎப் கட்டணம்
அவர் தயாரித்துள்ள 'லவ் பர் ஸ்கொயர் பூட்' என்ற படத்தின் மொத்த பட்ஜெட் 8 கோடியாம். இந்தப் படத்தை இவர், தியேட்டர்களில் திரையிட்டால் அவருக்கு கிடைக்கும் வருமானத்தை விட அவரிடமிருந்து மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் மூன்று மடங்கு சம்பாதிக்கலாம். அதனால் அவர் இந்தப்படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். ஒவ்வொரு இந்திய தயாரிப்பாளரும் அவர்களுடைய ஒரு படத்தை 1000 அல்லது 1500 தியேட்டர்களில் திரையிட விபிஎப் கட்டணமாக 2 முதல் 3 கோடி ரூபாய் சராசரியாக செலுத்த வேண்டியிருக்கிறது எனவும் சொல்லியிருக்கிறார்.

யாருக்கு லாபம்
ஒரு தியேட்டர் என்றால் அதன் உரிமையாளர் படத்தைத் திரையிட அதற்கான டிஜிட்டல் புரொஜக்டரை சொந்தமாக வாங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், பல தியேட்டர்களில் அவர்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் கடனுதவி செய்வது போல ஒப்பந்தம் போட்டு புரொஜக்டர்களை அளித்துள்ளன. சொந்தமாக புரொஜக்டெர் வைத்திருப்பவர்களும் விபிஎப் கட்டணங்களை வாங்குவதும் நடந்து வருகிறது. ஆனால், அவர்கள் அப்படி வாங்க வேண்டிய அவசியமில்லையாம்.

கட்டணக் கொள்ளை
இது குறித்து தமிழ்த் திரையுலகில் விசாரித்த போது, ஒரு தமிழ்ப் படத்தை சராசரியாக 400 தியேட்டர்களில் வெளியிடும் போது விபிஎப் கட்டணமாக 1 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்தக் கட்டணங்கள் மிக மிக அதிகமானவை.

தியேட்டர்காரர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் சேர்ந்து அடிக்கும் கட்டணக் கொள்ளை என்று கூட இதைக் குறிப்பிடலாம். இந்த விபிஎப் கட்டணங்களை இவ்வளவு அதிகமாக வாங்க வேண்டிய அவசியமில்லை. டிஜிட்டல் கன்வெர்ஷன் கட்டணங்களை மட்டும் வாங்கினால் போதும், அதுவும் தற்போது மிக அதிகமாக உள்ளது. இந்தக் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டால், அல்லது முழுவதுமாக நீக்கப்பட்டால்தான் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக அமையும் என்கின்றனர்.

கடந்தாண்டு தமிழ் திரையுலகம் போராட்டம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டணங்களை எதிர்த்துதான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புதிய படங்களை திரையிடாமல் வேலை நிறுத்தம் செய்தனர். அந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை