ஏடிபி ஆடவர் ஒற்றையர் தரவரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோகோவிச்: 84ம் இடத்திற்கு முன்னேறினார் குன்னேஸ்வரன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏடிபி ஆடவர் ஒற்றையர் தரவரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோகோவிச்: 84ம் இடத்திற்கு முன்னேறினார் குன்னேஸ்வரன்

பாரீஸ்: ஏடிபி ஆடவர் ஒற்றையர் தர வரிசை பட்டியல் நேற்று வெளியானது. சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட இந்த தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர்  பட்டியலில் செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2ம் இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர்  ஸ்வரேவ் 3ம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி, 84ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கலிபோர்னியாவில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர் முடிவடைந்த பின்னர், ஆடவர் ஒற்றையர் தரவரிசை பட்டியலை நேற்று சர்வதேச டென்னிஸ்  சங்கம் வெளியிட்டது. இதில் இண்டியன்வெல்ஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றதால் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், 4 இடங்கள்  முன்னேறி, 4,755 புள்ளிகளுடன் தரவரிசையில் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.



இந்த பைனலில் கோட்டை விட்ட சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர்  பெடரர் (4,600 புள்ளிகள்), 4ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். முதலிடத்தில் 10,990 புள்ளிகளுடன் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து  நீடிக்கிறார்.

2ம் இடத்தை ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் (8,725 புள்ளிகள்), 3ம் இடத்தை ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவும் (6,630 புள்ளிகள்) தக்க வைத்துக்  கொண்டுள்ளனர். ஜப்பானை சேர்ந்த நிஷிகோரி 6ம் இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 7ம் இடத்திலும் உள்ளனர்.

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரில் 3ம் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 13 இடங்கள் முன்னேறி 662 புள்ளிகளுடன்  தரவரிசையில் முதன் முறையாக 84வது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா (5,991 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

செக் குடியரசை சேர்ந்த கிவிடோவா (5,550  புள்ளிகள்) 2ம் இடத்தையும், ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் (5,457 புள்ளிகள்) 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

.

மூலக்கதை