நடிகர் கலாபவன்மணி கொலை வழக்க: பிரபல நடிகர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: சிபிஐ அதிரடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர் கலாபவன்மணி கொலை வழக்க: பிரபல நடிகர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: சிபிஐ அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் கலாபவன்மணி கொலை வழக்கில் பிரபல நடிகர்கள் உள்பட நண்பர்கள், உதவியாளரிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று முதல் நடக்கிறது. பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை  செய்யப்பட்டபோது ரத்தத்தில் பூச்சி கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முதலில் உள்ளூர் போலீசாரும் பின்னர் குற்றப்பிரிவு  போலீசாரும் விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கலாபவன்மணியின்  தம்பி ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை சிபிஐ  விசாரிக்க உத்தரவிட்டது.

தொடர்ந்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் கலாபவன்மணியுடன் தொடர்புடைய சிலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்தது.   இதன்படி சிபிஐ கலாபவன்மணியின் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த  உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கலாபவன்மணி இறப்பதற்கு முன் அவரது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது விருந்து நடத்தினார். அப்போது அந்த விருந்தில் நடிகர்கள் ஜாபர் இடுக்கி,  சாபுமோன், கலாபவன்மணியின் மேலாளர் ஜோபிசெபஸ்டியன், மனைவியின் உறவினர் ரிபின், நண்பர்களான அருண், அனில்குமார், உதவியாளர் முருகன்  ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதன்படி இன்று முதல் கொச்சியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.

.

மூலக்கதை