பிரபல தயாரிப்பாளரை தாக்கிய ஜோதிகா பட இயக்குநருக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரபல தயாரிப்பாளரை தாக்கிய ஜோதிகா பட இயக்குநருக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொச்சியில் மலையாள தயாரிப்பாளர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய இயக்குர் ரோஷன் ஆன்ட்ரூசுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரோஷன் ஆன்ட்ரூஸ்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலையாள சினிமா தயாரிப்பாளர் ஆல்வின்  ஆன்றனி வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளா சினிமாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூசுக்கு தடை விதிக்க சினிமா தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது.

நேற்று கொச்சியில் நடந்த தயாரிப்பாளர் சங்க  அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து கேரள பிலிம்சேம்பர் பொது செயலாளர் நாகாஅப்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்றனி வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய ரோஷன் ஆன்ட்ரூஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று  தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்றனி தனது மனைவி மற்றும் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவை சந்தித்து மனு அளித்தார். அதன்பின்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ரோஷன்ஆன்ட்ரூசுக்கு தடைவிதிக்க தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அவரை  வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எங்கள் அனுமதி பெற்ற பின்னரே படபிடிப்பை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை