பண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும்  பங்குனிமாதம் நடைபெறுவது வழக்கம்.

இத்திருவிழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் வந்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  திருவிழா கடந்த மார்ச் 4ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது.



நேற்று இரவு 8 மணியளவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு அக்னியிடப்பட்டது. அதிகாலை 2 மணியளவில் குண்டத்தில் அக்னியிடப்பட்ட மரத்துண்டுகள்  எரிந்து சிவப்புநிற தணலாக மாறியதையடுத்து சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம்புதூர், வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த ஊர்பெரியவர்கள் நெருப்பு  தணலை மூங்கில் கம்புகளால் அடித்து 10 அடி நீளம் 4 அடி அகலம், ஒரு அடி உயரம் கொண்ட குண்டத்தை தயார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாலை 3  மணிக்கு மங்கல வாத்தியங்களுடன் அம்மன் சப்பரம் கோயில் மேற்குப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு சென்று அம்மன் அழைப்பு நடைபெற்று சரியாக 3. 50  மணிக்கு அம்மன் சப்பரம் மற்றும் படைக்கலத்துடன் குண்டத்தை வந்தடைந்தது. அங்கு பூ உருட்டப்பட்டு வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் குண்டத்தை  சுற்றிலும் கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை 4. 05 மணிக்கு பூசாரி செந்தில்குமார் குண்டத்தை சுற்றிலும் கற்பூரமேற்றி ஆரத்தி காட்டியபடி இறங்கினார்.

பின்னர் கோயில் பூசாரிகள், பரம்பரை  அறங்காவலர்கள், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். குண்டம் இறங்கும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று அம்மனை  தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் பக்தர்கள் அம்மனை தரிசித்தபடி சென்றனர்.

விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், வனத்துறையினர்  உள்ளிட்டோரும் குண்டம் இறங்கினர். பெண் பக்தர்கள், குழந்தைகளை சுமந்தபடி ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து குண்டம் இறங்கினர்.

குண்டம் இறங்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் தங்க  கவசம் மற்றும் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து மாலை 4 மணிவரை பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்  செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் இறங்கிய பின்னர் விவசாயிகள் கொண்டு வந்திருந்த உழவு மாடுகள் குண்டத்தில் இறக்கப்பட்டது.

.

மூலக்கதை