நாடுமுழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் சுறுசுறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடுமுழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் சுறுசுறுப்பு

புதுடெல்லி: நாடுமுழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் வேட்பாளர்கள்  தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பு மனுவின் போது, வேட்பாளர்கள் நடத்தை குறித்து தேர்தல் ஆணையம் கெடுபிடி உத்தரவுகளை  பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.

முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி நடக்க உள்ள நிலையில்,  ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. ஆந்திரா,  அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது.

ஒடிசாவுக்கு மட்டும் 4 கட்டமாக தேர்தல்  நடக்கவுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகி, கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல்கட்ட தேர்தல்  நடக்க உள்ள 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு தாக்கல் ேநற்று தொடங்கியது. 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி  நாளாகவும், 26ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 28ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதலும், ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.   மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல்  11ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள 97 மக்களவை தொகுதிகளுக்கான (13 மாநிலங்கள்) வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி, அசாம் - 5,  பீகார் - 5, சட்டீஸ்கர் - 3, ஜம்மு காஷ்மீர் - 2, கர்நாடகா - 14, மகாராஷ்டிரா - 10, மணிப்பூர் - 1, ஒடிசா - 5, தமிழ்நாடு - 39, புதுச்சேரி - 1, திரிபுரா - 1, மேற்குவங்கம்  - 3, உத்தரபிரதேசம் - 8 என, 97 மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

இத்துடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலுக்கு, 35  சட்டசபை தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. மேற்கண்ட 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பட்டியலில், இன்று வேட்புமனு  தாக்கலும், 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகவும், 27ம் தேதி வேட்பு  மனுக்கள் பரிசீலனையும், 29ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்  பெறுதலும்,  ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

மே 23ம் தேதி வாக்கு  எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை இடைத்ேதர்தலை  பொறுத்தவரை, மேற்கண்ட அட்டவணை அடிப்படையில் 18 தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

 

இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை  தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும்.

வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய  புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும்.   அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24ம்  தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

வேட்புமனு தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன.   இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை  தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு  இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள்,  டிவி சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை