அதிகாலை 2 மணிக்கு நடந்த விழாவில் கோவாவில் மீண்டும் பாஜ முதல்வர் பதவியேற்பு; கூட்டணி கட்சிக்கு 2 துணை முதல்வர்கள் பதவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிகாலை 2 மணிக்கு நடந்த விழாவில் கோவாவில் மீண்டும் பாஜ முதல்வர் பதவியேற்பு; கூட்டணி கட்சிக்கு 2 துணை முதல்வர்கள் பதவி

பனாஜி: கோவாவின் புதிய முதல்வராக பாஜவை சேர்ந்த பிரமோத் சாவந்த், அதிகாலை நடந்த விழாவில் பதவியேற்றுக் கொண்டார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த  இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று முன்தினம்  மரணம் அடைந்தார். அதனால் சட்டப்பேரவையில் பாஜ உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது.

தற்போது, கோவா சட்டப்பேரவையில் 36 உறுப்பினர்கள்  உள்ளனர். எனவே பெரும்பான்மையை பெற பாஜவுக்கு 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டது.

பாரிக்கர் இறப்பால், புதிய முதல்வர் தேர்வை பாஜ தலைமை  முடுக்கிவிட்டது. தொடர்ந்து, பாஜவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாடி  கோமன்தக்  கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பாஜ,  கோவா சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த சாவந்தை  தேர்ந்தெடுத்துள்ளதாக நேற்றிரவே தகவல்கள் வெளியாகின.

அதன்படி, கோவா மாநிலத்தின் 11வது  முதல்வராக, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றி வந்த பாஜ  கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் (45)  இன்று அதிகாலை 2 மணியளவில் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர்  மாளிகையில் அதிகாலையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் மிருதுளா சின்ஹா,   சாவந்துக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.   நேற்று இரவு நடைபெற இருந்த பதவியேற்பு விழா, தாமதப்படுத்தப்பட்டு இன்று   அதிகாலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசில், கூட்டணியின் 3  எம்எல்ஏக்கள் இடம்பெறுவர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவா துணை முதல்வராக இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு  இருக்கிறது.
 
அதன்படி, கோவா பார்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசி மற்றும்  மஹாராஷ்டிரவாடி கோமன்தக் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிகர் ஆகியோர் துணை   முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களாக மனோகர், ரோஹன், கோவிந்த், வினோத், ஜெயேஷ், மாவின்,  விஸ்வஜித், மில்னந் நாயக்,  நிலேஷ் ஆகியோர் பதவி ஏற்றனர். சட்டசபை சபாநாயகராக தற்போது தற்காலிகமாக மைக்கேல் லோபோ செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து,  முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘பாஜ தலைமை என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்துள்ளது. நான் இந்த நிலைக்கு முன்னேற எனக்கு  மனோகர் பாரிக்கர் தான் உதவி செய்துள்ளார்’ என்றார்.

புதியதாக பதவியேற்ற முதல்வர் பிரமோத் சாவந்த், இளங்கலை ஆயுர்வேத மருத்துவர் பட்டம்  பெற்றவர். இவரது மனைவி சுலக்‌ஷனா, கோவா மாநில பாஜ மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார்.

புதிய முதல்வருக்கான தேர்வில், கடந்த சில  மாதங்களாகவே பிரமோத் சாவந்த் பெயர் பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை