3700! மதுரை வருகை தரும் வெளிமாநில போலீசார்...தேர்தல், சித்திரைத் திருவிழாவை சமாளிக்க

தினமலர்  தினமலர்
3700! மதுரை வருகை தரும் வெளிமாநில போலீசார்...தேர்தல், சித்திரைத் திருவிழாவை சமாளிக்க

.மதுரை:மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடக்கும் ஏப்.,18 லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடப்பதால் பாதுகாப்பு பணிகளுக்காக 3700 போலீசார் கேரளா, ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.
சித்திரை திருவிழாவின் போது ஏப்.,18 தேர்தல் நடப்பதால் மக்கள் ஓட்டளிப்பதில் சிரமம் ஏற்படும். தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாததால் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படவுள்ளது. 'பாதுகாப்பு பணிகளுக்காக 3700 போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்படுவர்' என கலெக்டர் நடராஜன் அறிவித்திருந்தார்.வழக்கமாக சித்திரை திருவிழாவிற்கு வெளிமாவட்ட போலீசார் மதுரை வரவழைக்கப்படுவர். இம்முறை தேர்தலால் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதனால் மதுரைக்கு கூடுதலாக 3700 போலீசாரை வெளிமாநிலங்களில் இருந்து அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்.,11ல் தேர்தல் நடக்கவுள்ள ஆந்திரா, தெலுங்கானா, ஏப்.,23ல் தேர்தல் நடக்கும் கேரளாவில் இருந்து போலீசாரை தேர்தல் கமிஷன் மூலம் மதுரைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையே ஓட்டுப்பதிவு மதுரைக்கு மட்டும் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லுாரியில் பாதுகாக்கப்பட உள்ளன. எதிர்சேவை தினமான அன்றிரவு முதல் மறுநாள் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதியில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கூடுவர். தவிர மருத்துவக்கல்லுாரி அமைந்துள்ள பனகல் ரோடு, காந்தி மியூசியம் ரோடு வழியாகவும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருப்பர். இரவு 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை சேகரித்து மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு வர இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை ஆகி விடும். அப்போது கல்லுாரி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் வாகனங்களில் துணை ராணுவ வீரர்கள் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை. கூட்டத்திற்கு இடையே சைரன் பொருத்திய வாகன உதவியுடன், உரிய வழித்தடங்கள் மூலம் கல்லுாரிக்குள் கொண்டு போய் சேர்ப்பதில் போலீசாருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சிரமம் இருக்காது,'' என்றார்.

மூலக்கதை