5 லட்சம் யூனிட் மின்சாரம்!சாய ஆலைகளே உற்பத்தி செய்யலாம் ... ஐ.ஐ.டி., தொழில்நுட்பம் கைகொடுக்கிறது

தினமலர்  தினமலர்
5 லட்சம் யூனிட் மின்சாரம்!சாய ஆலைகளே உற்பத்தி செய்யலாம் ... ஐ.ஐ.டி., தொழில்நுட்பம் கைகொடுக்கிறது

திருப்பூர்:சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன், நீராவியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, திருப்பூர் சாய ஆலை துறை தயாராகி வருகிறது.பின்னலாடை துறையின் ஓர் அங்கமாக திருப்பூரில், 500க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில், துணிக்கு சாயமேற்ற நீராவி பயன்படுத்தப்படுகிறது. பாய்லர்களை சூடேற்றி, அதிக அழுத்தத்தில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது.சாய ஆலை பாய்லர்களில் உருவாகும் அழுத்தம் மிக்க நீராவியை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகிறது, சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.,).திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜ், சென்னை ஐ.ஐ.டி., சென்று, சாய ஆலைகளில் மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பார்வையிட்டுள்ளார். இந்த தொழில் நுட்பத்தை, திருப்பூரில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.வரும் ஜூன் மாதம், ஐ.ஐ.டி.,ன் புதிய தொழில்நுட்பத்தை, திருப்பூர் சாய ஆலைகளில் நிறுவி, சோதனை ஓட்டம் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது:சாய ஆலை பாய்லர்களில் உருவாகும் அதிக அழுத்த நீராவியை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கி வருகிறது.பாய்லரில் உற்பத்தியாகும் நீராவி, சாயமேற்றும் சாப்ட்புளோ மெஷினுக்கு செல்லும் வழியில், டர்பைன் எனப்படும் சக்கரம் போன்ற தோற்றம் கொண்ட, தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. அதிக அழுத்தத்தில் செல்லும் நீராவி, டர்பைன் மீது மோதி, அதை சுழலச்செய்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.சாய ஆலை பாய்லர்களின், தேவைக்கு அதிகமான அழுத்தத்தில் நீராவி உற்பத்தியாகிறது. மின்சாரம் தயாரிக்கும் டர்பைனை கடந்து செல்லும்போது, நீராவியின் அழுத்தம் சற்று குறைந்து, சீராகிறது. சாயமேற்றுவதற்கும், போதுமான அழுத்தத்தில், தேவையான அளவு நீராவி சென்றடையும்.மின்சாரம் தயாரிப்பதற்காக கூடுதல் எரிபொருள் பயன்படுத்த தேவையில்லை. ஒரு டன் அளவுள்ள பாய்லரில், நாளொன்றுக்கு 20 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்திக்கு, வெறும் 1.20 ரூபாய் மட்டுமே செலவிட வேண்டிவரும்.திருப்பூர் சாய ஆலைகளில், மின் உற்பத்திக்கு உகந்த அளவில், மொத்தம் 500 பாய்லர்கள் உள்ளன. இந்த பாய்லர்கள் மூலம், நாளொன்றுக்கு, குறைந்தபட்சம், 5 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.ஒவ்வொரு சாய ஆலையும், தனது மின் தேவையில் 10 சதவீதத்தை சுயமாக பூர்த்தி செய்துகொள்ளமுடியும். தற்போதைய மின் செலவை கணக்கிடும்போது, நீராவி மின் உற்பத்தியின்மூலம், சாய ஆலை துறைக்கு, நாளொன்றுக்கு 25 லட்சம் ரூபாய் மீதமாகும்.வரும் ஜூன் மாதம், இப்புதிய தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம், திருப்பூரில் நடத்தப்படும்; அதன்பின், ஐ.ஐ.டி.,யிடமிருந்து, புதிய தொழில்நுட்பம் கொள்முதல் செய்யப்பட்டு, சாய ஆலைகளில் நிறுவப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை