பால் காய்ச்சலாம்!14 மாடி அரசு குடியிருப்புகளில்..மின் இணைப்பு விவகாரம் 'ஓகே!'

தினமலர்  தினமலர்
பால் காய்ச்சலாம்!14 மாடி அரசு குடியிருப்புகளில்..மின் இணைப்பு விவகாரம் ஓகே!

கோவை:மேட்டுப்பாளையம் ரோட்டில் செல்பவர்கள் ஒவ்வொருவரையும், அண்ணாந்து பார்க்க வைத்து விடுகிறது அந்த அரசு அடுக்குமாடி குடியிருப்பு. கட்டுமான பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ள நிலையில், வரும் ஜூலையில் பால் காய்ச்சலாம் என்று, அரசு ஊழியர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், அரசு ஊழியர்களுக்கு, 14 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டும் பணி, கவுண்டம்பாளையத்தில், 2016ம் ஆண்டு துவங்கியது. வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 12.8 ஏக்கரில், 522 கோடி ரூபாய் மதிப்பில், இங்கு 1,848 வீடுகள் கட்டப்படுகின்றன.
மின் இணைப்பில் சிக்கல்
இதில், ஏ, பி, சி, டி, என நான்கு பிரிவுகளாக வீடுகள் பிரிக்கப்பட்டு, எட்டு பிளாக்குகளில், படுக்கை அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க, 5 மெகாவாட் மின்திறன் தேவைப்படுகிறது.இதற்கென தனி துணைமின் நிலையம் அமைக்க, குறிப்பிட்ட அளவு இடத்தை ஒதுக்க, மின்பகிர்மான கழகம் கோரியது. ஓராண்டுக்கு முன்னரே, 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வீட்டு வசதி வாரியம் அதற்கான இடத்தை ஒதுக்கவில்லை.
நிர்வாக இயக்குனர் ஆய்வு
விதிமுறைகளை காரணம் காட்டி மின்பகிர்மான கழகமும், மின் இணைப்புக்கான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்., மாதம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர், இக்கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மின் இணைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை, துறை ரீதியான உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக, தெரிவித்து சென்றார். இதையடுத்து, துணைமின் நிலைய இடப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக கூறும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், வரும் ஜூலைக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை