இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் பைனல் பெடரரை வீழ்த்தினார் டொமினிக் தீம்: மகளிர் ஒற்றையரில் பினாகா சாம்பியன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் பைனல் பெடரரை வீழ்த்தினார் டொமினிக் தீம்: மகளிர் ஒற்றையரில் பினாகா சாம்பியன்

கலிபோர்னியா: இண்டியன்வெல்ஸில் நடந்த பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் ரோஜர் பெடரரை வீழ்த்தி, டொமினிக் தீம்  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பட்டத்தை கனடாவை சேர்ந்த பினாகா ஆண்ட்ரீஸ்க் தட்டிச் சென்றுள்ளார்.

இண்டியன்வெல்ஸில நேற்று  நடந்த ஆடவர் ஒற்றையர் பைனலில் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 8ம் இடத்தில் உள்ள ஆஸ்திரிய வீரர் டொமினிக்  தீமும் மோதினர். ஆட்டம் துவங்கிய 36 நிமிடங்களில், 6-3 என்ற கணக்கில் பெடரர் முதலாவது செட்டை கைப்பற்றினார்.

2ம் செட்டில் டொமினிக் தீம்  எழுச்சியுடன் ஆடினார். அந்த செட் 6-3 என்ற கணக்கில் டொமினிக் வசமானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3ம் செட்டில், இருவரும் சளைக்காமல் போராடினர்.   அவரவர் கேம்களை அவரவர் தக்க வைத்துக் கொண்டனர்.

இதனால் 5-5 என்ற சமநிலை வரை அந்த செட் நீடித்தது.

பின்னர் பெடரரின் சர்வீசை அடுத்தடுத்து பிரேக் செய்த டொமினிக், 6-5 என முன்னிலை பெற்றார்.   தொடர்ந்து தனது கேமை எளிதாக தக்க வைத்துக் கொண்ட அவர் 7-5 என 3வது செட்டில் வெற்றி பெற்றார். இதையடுத்து 3-6, 6-3, 7-5 என 3 செட்களில் பெடரரை  வீழ்த்தி, இண்டியன் வெல்ஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டொமினிக் தீம் கைப்பற்றினார்.

இது இருவருக்கும் இடையேயான 5வது மோதல் என்பது  குறிப்பிடத்தக்கது. முன்னதாக 4 போட்டிகளில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தனர்.

ரோஜர் பெடரர் இதுவரை 5 முறை இண்டியன்வெல்சில்  ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் டொமினிக் தீம் ஆடவர் தரவரிசையில் 8ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு  முன்னேறியுள்ளார்.



பினாகா வெற்றி: மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கனடாவை சேர்ந்த பினாகா ஆண்ட்ரீஸ்க்கும், ஜெர்மனிய வீராங்கனை ஆஞ்சலிக் கெர்பரும் மோதினர்.   மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 3-6, 6-4 என 3 செட்களில் கெர்பரை வீழ்த்தி, பினாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

.

மூலக்கதை