பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; தேர்தல் அறிக்கையில் கட்சிகள் உறுதி அளிக்க, ‘அசோசெம்’ கோரிக்கை

தினமலர்  தினமலர்
பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; தேர்தல் அறிக்கையில் கட்சிகள் உறுதி அளிக்க, ‘அசோசெம்’ கோரிக்கை

புதுடில்லி: ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பு, மத்தியில் அமைய உள்ள புதிய அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஏப்., 11ல் துவங்கும் லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட உள்ளன. அதில், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு, 8 – -8.5 சதவீதமாக உயர்த்தி, 2025ல், 5 லட்சம் கோடி டாலராக, அதாவது, 350 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளிக்கப்பட வேண்டும்.

‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைக்கப்படும். 20 சதவீதத்திற்கு மேல், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு, 1 சதவீதம் வரி தள்ளுபடி வழங்குவோம். ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வருமான வரியை குறைப்போம்’ என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.

கல்வி செலவு:
மாணவர்களின் கல்விச் செலவை குறைக்க, வெளியில் இருந்து பெறப்படும் கல்விச் சேவைகளுக்கான, ஜி.எஸ்.டி., தற்போதைய, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சிக்கு, வங்கி சாராத நிதியங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால், தொழிலகங்கள், குறைந்த வட்டியில் விரைவாக கடன் பெறலாம்.

விவசாயிகள் வருவாயை அதிகரிக்க, வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் குத்தகை அடிப்படையிலான சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கலாம். வேளாண்துறைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு மூலதன மானியம் வழங்கலாம்.விரைவில் அழுகும் பொருட்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில், குளிர்பதன கிடங்குகள் அமைக்கலாம். வேளாண் பொருட்கள், தேக்கமின்றி சீராக வினியோகிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம்.

தயாரிப்பு துறையை ஊக்குவிக்க, ஜி.எஸ்.டி., வரியினங்களை, 8 மற்றும் 16 சதவீதம் என, இரண்டாக குறைக்கலாம்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வருமான வரி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய, 25 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். இதே காலத்தில், ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களின் வரி, 30 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறைக்க வேண்டும்.

வாடகை வருவாய்:
வீடு வாடகை வருவாய்க்கு, 10 சதவீதம் என, ஒரே வரி விகிதம் நிர்ணயிக்க வேண்டும். வாடகை வாயிலான வருவாய் விகிதத்தை உயர்த்த, அதற்கான வருமான வரிக் கழிவை, 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பங்கு முதலீடுகளுக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை