உயரும் சந்தையில் நாம் என்ன செய்வது?

தினமலர்  தினமலர்
உயரும் சந்தையில் நாம் என்ன செய்வது?

பங்குச் சந்தை, தொடர்ந்து உயர துவங்கிவிட்டது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளை வாங்குவதால் தான் இந்த தொடர் ஏற்றம் நிகழ்கிறது.தேர்தல் போக்கை பார்த்து, பிறகு பங்குகளை வாங்கலாம் என்று நினைத்த உள்நாட்டு முதலீட்டாளர்கள், சற்று அதிர்ந்தே காணப்படுகின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்க காட்டும் அவசரம் எதிர்பாராத ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இது நடக்காது என்றே சந்தையில் அனைவரும் கருதினர். ஆனால், இதை உடைத்து எறிந்து, பங்குகளை வாங்கி, சந்தை கணக்குகள் அனைத்தையும் குழப்பி விட்டனர், அன்னிய முதலீட்டாளர்கள்.

கடந்த வாரம், பல முன்னணி நிறுவன பங்குகள், அன்னிய முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட பங்குகள் பெரும்பாலும் பெரு நிறுவன பங்குகள் என்பது, பலர் எதிர்பாராதது. அதுவும், இடைவெளி இன்றி வாங்குவது, நம் உள்ளூர் முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.ஒருபுறம், கடந்த ஆண்டு நாம் விரும்பி வாங்கிய குறு, சிறு, நடுத்தர நிறுவன பங்குகள், இன்னமும் விலை சரிவிலிருந்து முழுமையாக மீளவில்லை. மீறி, விலை ஓரளவு உயர்ந்தாலே, அவற்றில் மீண்டும் விற்பனை தான் அதிகம் தென்படுகிறது.

மறுபுறம், வேறு புதிய பங்குகள் சந்தையில் அதிகம் வாங்கப்படுகின்றன. உள்ளூர் முதலீட்டாளர்கள் சந்தை உயர்ந்த சூழலில், தாங்கள் பங்கேற்க தவறியதை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர். இனி வரும் வாரங்களில், தங்கள் வசம் இருக்கும் பங்குகளும் உயரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.இந்த நம்பிக்கை நிறைவேற, அன்னிய முதலீட்டாளர்களின் கவனம், நம் கையிருப்பில் உள்ள பங்குகள் பக்கம் திரும்ப வேண்டும். ஆனால், இப்போது உள்ள சந்தை சூழலில், அது எளிதல்ல. நிறுவன மதிப்பீடுகள், முதலீட்டு ஆர்வம், எதிர்கால வளர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவை, பெரு நிறுவனங்களுக்கே சாதகமாக தோன்றுகின்றன.

இந்த அளவீடு, பன்னாட்டு முதலீட்டாளர்களின் சந்தை தேர்வுகளில் மிக தெளிவாக வெளிப்படுகிறது. மேலும், குறுகிய காலகட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு உள்ளது. ஆக, சூழ்நிலை, நிர்ப்பந்த அடிப்படையில் அவர்கள் முதலீட்டு தேர்வு, பெரு நிறுவனங்கள் பக்கம் அமைவது இயல்பு.அடுத்து அரசியல் மாற்றங்கள், சந்தை போக்கை நிச்சயம் பாதிக்கும். நிலையான அரசு அமைவது உறுதி ஆகும் பட்சத்தில், சந்தைக்கு பண வரவு மேலும் வேகம் பிடிக்கும். அப்போது, முதலீட்டு அவசரம் அதிகரிக்கும். இது, பெரு நிறுவன பங்கு மதிப்பையும், சந்தை குறியீடுகளையும் மேலும் உயர்த்தும்.

இந்த மாற்றங்களால் பயன் அடையும் வகையில், நம் முதலீட்டு தேர்வுகளை விரைந்து மாற்றியமைக்க வேண்டும். அப்படி விரைந்து மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள், தங்களின் தேர்வுகள் வெற்றி பெறும் வரை காத்திருக்க தயாராக இருக்க வேண்டும்.நாம், காலத்தோடு சார்ந்து, குறுகிய கால முதலீடு செய்யலாம் அல்லது காலத்தை வெல்லும் நெடுங்கால முதலீட்டு தேர்வுகளை செய்யலாம். அந்த உரிமையும், பொறுப்பும் தனி முதலீட்டாளர்களையே சார்ந்தது.

-ஷியாம் சேகர்

மூலக்கதை