காலை கட்டி கொண்டு எப்படி ஓட முடியும்?

தினமலர்  தினமலர்
காலை கட்டி கொண்டு எப்படி ஓட முடியும்?

இந்தியாவின் முக்கிய தொலை தொடர்பு அமைப்பான, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால், பிப்ரவரி மாத சம்பளத்தை உரிய தேதியில் வழங்க முடியவில்லை. உடனே, அதை இழுத்து மூடு, நஷ்டம் செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள் எதற்கு என்று ஒரே கூப்பாடு. இதெல்லாம் என்ன டிசைன்? பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பதை, யாரும் மறுக்கவில்லை. பி.எஸ்.என்.எல்., அதில் கோட்டை விட்டது பெருந்தவறு. அதில் பணியாற்றும், 1.76 லட்சம் பணியாளர்கள் கொதிப்படைவதில் வியப்பில்லை.தேவைப்படும் நிதியாதாரத்தை வங்கிகளில் பெற்றுக் கொள்ள, தற்போது வழி செய்யப்பட்டுஇருக்கிறது.

குற்றச்சாட்டுகள்:
ஆனால், அதற்குள் ஒரு பெரிய பரபரப்பு. தனியார் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் முதற்கொண்டு பலரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் குறைகளை பட்டியலிட ஆரம்பித்து விட்டனர்.மொத்த வருவாயில், 65 சதவீத தொகை, பணியாளர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களோடு போட்டி போட முடியவில்லை; சேவையின் தரத்தில் குறைபாடு இருப்பதால் தான், வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல்., சேவையை புறக்கணிக்கின்றனர் என, நீளுகின்றன விமர்சனக் கணைகள்.தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் நஷ்டம் மட்டும், 90 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிபரம்.

விரைவில், இந்நிறுவனத்திலும், எம்.டி.என்.எல்.,லிலும் இருந்து விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பலர் வெளியேறுவர். அதன் பின், இந்த நிறுவனம் மூச்சு விடும் என்று ஆரூடம் சொல்பவர்களும் இருக்கின்றனர்.இன்னொரு தரப்பினர், இதில் உள்ள பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பினால் தான், பி.எஸ்.என்.எல்., பிழைக்க முடியும் என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகின்றனர்.ஒருவகையில் இத்தகைய கருத்துகளை கேட்கும்போது, தனியார் மய சிந்தனையின் போதமை அல்லது குறுகிய நோக்கம் பளிச்சென்று வெளிப்படுவது தெரிகிறது.

கேட்க வேண்டிய கேள்விகள் முற்றிலும் வேறு. ஆனால், தேவையில்லாமல் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை மட்டம் தட்டி, அதைப் பற்றிய நல்லெண்ணங்களைச் சிதைத்து, மறைமுகமாக மூடுவிழா காணுவதற்கான வழி செய்யப்படுகிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.

சேவையே நோக்கம்:
ஒரு சில புள்ளிவிபரங்களை பாருங்கள். இவ்வளவு பெரிய நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லின், 2018 இறுதி வரையான மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? வெறும், 13 ஆயிரம் கோடி ரூபாய். ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தின் கடனோ, 1.2 லட்சம் கோடி ரூபாய்; ‘பார்தி ஏர்டெல்’லின் கடனோ, 1.06 லட்சம் கோடி ரூபாய். தொலை தொடர்பு துறையிலேயே மிகவும் குறைந்த அளவுக்கு கடன் வைத்திருப்பது, பி.எஸ்.என்.எல்., தான்.இன்றைக்கு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சேவை தருவது, பி.எஸ்.என்.எல்., தான். லாபநோக்கமற்று, சேவை தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுவது இந்த நிறுவனம்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களோ, அரசு வங்கிகளில் கடன் வாங்கி தான் வியாபாரம் நடத்துகின்றன. உண்மையில், மக்கள் பணத்தை பயன்படுத்தி தான், அவை லாபம் ஈட்டுகின்றன. அவை வைத்திருக்கும் நிலுவைத் தொகைகளை என்று திருப்பிச் செலுத்துமோ, அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.பி.எஸ்.என்.எல்., வைத்திருக்கும் நிலங்களும், உள்கட்டுமானங்களும், டவர்களும் தான் அதன் மிகப்பெரும் பலம். இதர தொலை தொடர்பு நிறுவனங்கள், பல சர்க்கிள்களில் இவர்களது டவர்களை பயன்படுத்தி தான், தம் சேவையை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.

யார் பிழை?
ஒரே ஒரு பிரச்னை தான் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பொதுத் துறை நிறுவனங்களைப் பற்றி அரசின் கொள்கை என்ன? ஒரு காலத்தில் பொதுத் துறை நிறுவனங்களும் இருக்க வேண்டும், தனியாருக்கும் ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. இன்றும் அதேநிலை தான் தொடர்கிறதா என்று கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவும், பி.எஸ்.என்.எல்., விஷயத்தில் இதைக் கேட்க வேண்டியுள்ளது. நாடெங்கும் பிற தொலை தொடர்பு நிறுவங்கள், ‘4ஜி’ சேவையை விரைந்தும், பரவலாகவும் வழங்கிக் கொண்டு இருக்கும்போது, பி.எஸ்.என்.எல்., ஏன் நொண்டுகிறது?

ஏர்டெல், பிப்ரவரி, 2014 முதலும், ரிலையன்ஸ் ஜியோ, செப்டம்பர், 2016 முதலும், 4ஜி சேவைகளை வழங்க துவங்கிவிட்டன. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான், தொலை தொடர்பு அமைச்சகத்தில் இருந்து, 4ஜி சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது யார் பிழை?இவ்வளவு பணியாளர்கள் எதற்கு? எதற்கு அவர்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்? என்றெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் அபத்தமானவை. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், மொபைல் சேவைகள், 2000க்கு பின் தான் வந்தது.

ஆனால், தொலைபேசிகளோ அதற்கு பல, 10 ஆண்டுகளுக்கு முன்னரே வந்து, தொலைதுார கிராமங்களையும் அருகில் இழுத்து, இணைத்தது. அதற்கான வடங்களை இழுத்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல்.,லுக்கு முதல் இடம் உண்டு. அந்த வழக்கமான சேவைகளை வழங்குவதற்கு, இன்னும் ஏராளமானோர் தேவை.தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருபக்கம் ஏற்பட, மறுபக்கம், பணியாளர்கள் ஓய்வுபெற்று வெளியேறும்போது, அந்த நிறுவனம் தன்னை மேலும் தகவமைத்துக் கொள்ளும்.

தீர்வு:
ஒருசில விஷயங்கள் உண்மை. செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிய கருவிகளிலும், தொழில் நுட்பங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். வாடிக்கையாளர் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். போட்டி மிகுந்த தொலை தொடர்பு சந்தையில் தாக்குப் பிடிப்பதற்கு, இத்தகைய அணுகுமுறைகள் தேவை தான். இப்போது, இவை போதுமான அளவில் செய்யப்படவில்லை என்பதற்காக, அந்நிறுவனத்தையே மூடிவிட வேண்டும் என்றெல்லாம் பேசுவது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். பி.எஸ்.என்.எல்.,லை யும் மற்ற சேவையாளர்களுக்கு இணையாக ஓடவைப்பது ஒன்றே இதற்கு தீர்வு.

–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்

மூலக்கதை