அபாயம்!. தெற்குவாசல் ரயில்வே மேம்பாலத்தில் விபத்து ... பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியது.

தினமலர்  தினமலர்
அபாயம்!. தெற்குவாசல் ரயில்வே மேம்பாலத்தில் விபத்து ... பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியது.

மதுரை:மதுரையில் தெற்குவாசல் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. பாலத்தை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலை, ரயில்வே நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பாலம் முந்தைய தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த குறுகிய பாலத்திற்கு பதிலாக கீரைத்துறை - சிந்தாமணி ரோட்டில் அகலமான பாலம் கட்டினால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அப்போதே மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் தெற்கு வாசல் - வில்லாபுரம் ரோட்டில் இந்த குறுகிய பாலம் கட்டப்பட்டது.அவனியாபுரம் வழியாக வரும் வாகனங்களுக்கு நகருக்குள் நுழைய இப்பாலத்தை விட்டால் வேறு வழியில்லை. அதிக வாகனங்கள் செல்வதால் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகவுள்ளது.பாலத்தை முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ரயில்வே தண்டவாள பகுதியிலும் பாலம் மோசமாகவுள்ளது. பாலத்தில் தார்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. பாலத்தின் இருபுறமும் பெரும்பாலான மின் கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை. பள்ளங்களில் சிக்கும் இரு சக்கர வாகனங்களை சிரமத்திற்கு இடையே மீண்டு செல்ல வேண்டிய நிலையுள்ளது. வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை