கோடைக்கு முன்பே கோவையில் 'அனல்' தொண்டை காயுது!

தினமலர்  தினமலர்
கோடைக்கு முன்பே கோவையில் அனல் தொண்டை காயுது!

கோவை:கோடையை பயன்படுத்தி பாட்டில்கள், பாக்கெட்களில் தரமற்ற குடிநீர் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தரமற்ற குடிநீர் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பியுள்ளது, உணவு பாதுகாப்பு துறை.காலநிலை மாறுபாட்டால், மார்ச் துவங்கி மே வரை மட்டுமே இருந்து வந்த கோடைகாலம் தற்போது பிப்., மாதத்திலேயே துவங்கி, ஜூன் வரை நீடிக்கிறது.குடிநீர் பாக்கெட்கள், பாட்டில்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஒரு சில குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், தரமற்ற குடிநீரை பாக்கெட்கள், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கின்றன. இதை பருகும் பொதுமக்கள், நோய்வாய்ப்படுவது உறுதி என்கின்றனர் டாக்டர்கள். கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறுகையில்,''தரமற்ற குடிநீரை குடிப்பதால், தொண்டை பாதிப்பு ஏற்படலாம். மாசடைந்த குடிநீரை குடிப்பதால், காய்ச்சல், சளி, காலரா, சீதபேதி உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீரை சுத்திகரிக்க, நிர்ணயிக்கப்பட்ட அளவு குளோரின் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவை மீறி குளோரின் கலக்கும் போது, அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்,'' என்றார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், தொடர் ஆய்வு கள் நடத்தப்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனை செய்யப்படும் குடிநீர் பாக்கெட்கள், பாட்டில்களின் தரம் குறித்து, ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடிநீர் கேன்களில், நிறுவனத்தின் பெயர், முகவரி, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று, துறை உரிமம் எண்களை அச்சிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற குடிநீர் விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை