மோசடி கும்பல் உலா வர வாய்ப்பு:மக்களுக்கு தேர்தல் பிரிவு போலீசார் எச்சரிக்கை!

தினமலர்  தினமலர்
மோசடி கும்பல் உலா வர வாய்ப்பு:மக்களுக்கு தேர்தல் பிரிவு போலீசார் எச்சரிக்கை!

கோவை:தேர்தல் நேரத்தை பயன்படுத்தி, பறக்கும் படை அதிகாரிகள் போர்வையில், மோசடி கும்பல் உலா வர வாய்ப்பு இருப்பதால், பணம் எடுத்துச்செல்வோர் உஷாராக இருக்க, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.ஏப்., 18ல், தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது.
தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளை அரசியல் கட்சியினர் மீறுவது வாடிக்கை. அவற்றை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர போலீசில், 9 பறக்கும் படை மற்றும், 9 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு 'ஷிப்ட்'டுக்கு, 84 போலீசார் வீதம், 3 'ஷிப்டு'க்கு, 252 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பறக்கும் படைக்கு தலா, 3 போலீசார் மற்றும், 2 வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகன சோதனையோடு, ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர். உரிய ஆவணமின்றி, பணம் எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்கின்றனர். அனுமதியின்றி, சுவர்களில் அரசியல் விளம்பரம் எழுதி இருந்தால், அழிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம், வடவள்ளி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 7 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. இதேபோல், பல்வேறு இடங்களில், 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதை பயன்படுத்தி, பறக்கும் படை பெயரில், மோசடி நபர்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை