'விர்ர்ர்!' சென்னையில் தண்ணீர் விலை....கட்டுப்படுத்தாததால் விழி பிதுங்கும் மக்கள்

தினமலர்  தினமலர்
விர்ர்ர்! சென்னையில் தண்ணீர் விலை....கட்டுப்படுத்தாததால் விழி பிதுங்கும் மக்கள்

சென்னை:தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, சென்னையில் லாரி தண்ணீர் விலையை, சப்தமில்லாமல், தனியார் உயர்த்தி இருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை கைகொடுக்காத நிலையில், குடிநீர் ஏரிகள் வறட்சியில் உள்ளன. இதனால் சென்னை மாநகரிலும், புறநகர் உள்ளாட்சிகளிலும், குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகரில், 80 சதவீதம் இடங்களில், நிலத்தடி நீர்மட்டம், அதள பாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், அத்தியாவசிய தேவைக்கு கூட, தண்ணீரை காசு கொடுத்து, லாரியில் வாங்கும் அவலம் துவங்கிவிட்டது.சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டுமே, குடிநீர் வாரியம் சார்பில், லாரியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முன்பதிவு செய்தால் கிடைக்க, 15 முதல், 20 நாட்கள் வரை ஆகிறது.ஒரு மாதத்திற்கும் மேலாக, இந்த நிலையே காணப்படுகிறது. புறநகரில், அரசு சார்பில், லாரி தண்ணீர் விற்பனை கிடையாது.இதனால், தனியார் டேங்கர்களில் மட்டுமே, தண்ணீரை வாங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள கிராக்கியை பயன்படுத்தி, அவர்கள் சப்தமில்லாமல், விலையை உயர்த்திவிட்டனர்.பல்லாவரம் நகராட்சியில், கடந்த ஆண்டு, 500 ரூபாய்க்கு விற்பனையான, 5,000 லிட்டர் லாரி தண்ணீர், தற்போது, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதுவும், முன்பதிவு செய்தால், உடனே கிடைக்காது. இந்த விலை, அடுத்த மாதம் முதல், மேலும் அதிகரிக்கும் என, டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவிப்பதால், பொதுமக்கள் விழிபிதுங்குகின்றனர்.சென்னையை போன்று, புறநகர் நகராட்சிகளிலும், வாரியமோ, நகராட்சியோ, குறைந்த விலைக்கு, லாரி தண்ணீர் விற்பனை செய்தால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். அரசியல்வாதிகளின் அடாவடி இருக்காது என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, 800 ரூபாய் கொடுத்து, லாரி தண்ணீர் வாங்குகிறோம். இந்த விலை, அடுத்த மாதம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு, வாரத்திற்கு, மூன்று லாரி தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. தண்ணீருக்கு மட்டுமே இவ்வளவு பணம் செலவழித்தால், மற்ற தேவைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.-குரோம்பேட்டை மக்கள்.

மூலக்கதை