திருப்பூரில் பாதுகாப்பு பணிக்காக...கொடி அணிவகுப்பு!

தினமலர்  தினமலர்
திருப்பூரில் பாதுகாப்பு பணிக்காக...கொடி அணிவகுப்பு!

திருப்பூர்:லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக திருப்பூருக்கு துணை ராணுவத்தினர் வந்தனர்.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய, ஐந்து லோக்சபா தொகுதிகள் அடங்கியுள்ளன. ஏப்., 18ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லோக்சபா தொகுதிக்கான, 9 சட்டசபை தொகுதிகளில், பதட்டமானவையாக கண்டறி யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், கூடுதல் பாதுகாப்புக்காக, துணை ராணுவ படை, சிறப்பு காவல் படை போலீசார், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் எர்ணாகுளம் முகாமிலிருந்து திருப்பூருக்கு நேற்று முன்தினம் வந்தனர். துணை கமாண்டர் மேத்யூ தாமஸ் தலைமையில், 78 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் மாநகர போலீஸ் உடன் சேர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.தேர்தல் அமைதியாக நடக்கவும், வாக்காளர்கள் எவ்வித அச்சம் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகாமல், சுதந்திரமாக ஓட்டுப்போட ஏற்பாடு செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது. துணை ராணுவத்தினர், போலீசார், ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து சென்றனர்.இதில், போலீஸ் உதவி கமிஷனர்கள் ரமேஷ் கிருஷ்ணா, நவீன்குமார், கஜேந்திரன் பங்கேற்றனர். டவுன்ஹாலில் ஆரம்பித்து, பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.

மூலக்கதை