'பரஸ்பர வர்த்தக பிரச்னையை பேசி தீர்க்கலாம்': இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அழைப்பு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: இரு தரப்பு வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் என, இந்தியாவுக்கு, அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.


அமெரிக்க அதிபர், டிரம்ப், கடந்த ஓராண்டாக, 'ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிள் இறக்குமதி வரியை மேலும் குறைக்க வேண்டும் என, இந்தியாவை அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்.மேலும், மருத்துவ உபகரணங்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரியும் குறைக்கப்பட வேண்டும் என, அமெரிக்க அரசு கோரி வந்தது.அதை, மத்திய அரசு கண்டுகொள்ளாததால், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும், வேளாண், கைத்தறி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 50 பொருட்களுக்கு அளித்து வந்த, வரி விலக்கு சலுகையை, அமெரிக்கா, 2018 நவம்பரில் ரத்து செய்தது.

நெருக்கடி
அத்துடன், இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், ஜி.எஸ்.பி., அந்தஸ்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க பார்லிமென்டிற்கு, டிரம்ப், சமீபத்தில் கடிதம் அனுப்பினார். அமெரிக்கா, ஜி.எஸ்.பி., திட்டத்தின் கீழ், வளரும் நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு, வரி விலக்கு சலுகை வழங்குகிறது.இதன்படி, இந்தியாவின் ரசாயனம், பொறியியல் உள்ளிட்ட, 1,900 பொருட்கள் இறக்குமதிக்கு, வரி விலக்கு சலுகை கிடைக்கிறது. இந்த வரிச் சலுகை ரத்தானால், இந்தியா, வழிக்கு வரும் என, டிரம்ப் கணக்கு போட்டுள்ளார். ஆனால், இந்தியா, அமெரிக்காவுக்கு, ஓராண்டில் ஏற்றுமதி செய்யும், 560 கோடி டாலர் மதிப்பிற்கான பொருட்களில், ஜி.எஸ்.பி., மூலம், 19 லட்சம் டாலர் தான் வரிச் சலுகையாக கிடைக்கிறது.அதனால், இந்த அந்தஸ்தை ரத்து செய்தாலும் பெரிய பாதிப்பு இல்லை என, இந்தியா கருதுகிறது.

விவாதம்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ, மத்தியவெளியுறவு செயலர், விஜய் கோகலேவை சந்தித்து பேசினார்.


அப்போது அவர், 'இரு நாடுகளின் வர்த்தகப் பிரச்னைகளுக்கான தீர்வு, இந்தியாவின் கையில் தான் உள்ளது. 'அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து, இந்தியா உறுதியான முடிவெடுத்தால், ஜி.எஸ்.பி.,அந்தஸ்தை திரும்பப் பெறும் முடிவை, அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும்' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக திகழ்வதற்கே, அமெரிக்காவிற்கு விருப்பம். மிக முக்கிய பொருளாதார பங்குதாரராக, இந்தியா விளங்குகிறது.எனினும், வர்த்தகம் தான், பரஸ்பர உறவில் பிரச்னைக்குரியதாக உள்ளது. இந்தியா, வரி குறைப்பு குறித்து எந்தவொரு திட்டத்தையும் அளிக்கலாம். அதை விவாதிப்பதற்கு, அமெரிக்காவின் வாசல் கதவு திறந்தே உள்ளது. எந்த முடிவும், இந்தியாவின் கையில் தான் உள்ளது.அமெரிக்க அரசு, அரசாணை பிறப்பித்த, 60 நாட்களுக்கு பின் தான், ஜி.எஸ்.பி., அந்தஸ்து ரத்தாகும். அதனால், இன்னும் காலம் கடந்து விடவில்லை.பிரச்னையை பேசி தீர்க்கலாம். பொதுத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது என்பதும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதனால், அமெரிக்கா, ஜி.எஸ்.பி., ரத்து திட்டத்தை தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு:
அமெரிக்க பொருட்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகின்றன. கடந்த ஆண்டு, கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால், பரஸ்பர வர்த்தகப் பற்றாக்குறை, 7.1 சதவீதம் குறைந்துள்ளது. இரு தரப்பு வர்த்தகத்தில் சில பிரச்னைகள் கடும் சவாலாக உள்ளன. அவற்றுக்கு இரு நாடுகளும் இணைந்து தீர்வு காண வேண்டும்.அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்

மூலக்கதை