நியூசிலாந்தில் 49 பேரை கொன்றவனுக்கு வாழ்நாள் சிறை

தினமலர்  தினமலர்
நியூசிலாந்தில் 49 பேரை கொன்றவனுக்கு வாழ்நாள் சிறை

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து மசூதியில், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, 49 பேரை கொலை செய்த, ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞனுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளதாக, நீதிபதி தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நியூசிலாந்து மக்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துஉள்ள தீவு நாடு, நியூசிலாந்து. அமைதிக்கு பெயர் பெற்ற இந்த நாட்டில், நேற்று முன்தினம், கொடூர சம்பவம் நடந்தது.கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல் நுார் மசூதியிலும், லின்வுட் என்ற இடத்தில் உள்ள மசூதியிலும் நடந்த தொழுகையில், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர்; இதில், 49 பேர் பலியாகினர்.இந்த தாக்குதல் தொடர்பாக, ஒரு பெண் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த, பிரெண்டன் டாரன்ட், 28, என்பவன் தான் முக்கிய குற்றவாளி என, தெரிய வந்தது.பிரெண்டன் டாரன்டை, கிறைஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில், போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். கைவிலங்குடன், அவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, நீதிபதி படித்தார்.இதை கேட்ட பிரெண்டன், சற்றும் கவலைப்படாமல், 'ஓகே' என, சைகை செய்தான். இந்த குற்றங்களுக்காக, அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, நீதிபதி தெரிவித்தார்; அப்போதும், பிரெண்டன் சிரித்தபடி இருந்தான்.இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

நியூசிலாந்து பிரதமர், ஜசிந்தா ஆர்டன் கூறுகையில், ''பிரெண்டன், துப்பாக்கிக்கான உரிமம் வைத்துள்ளான். அவன், நியூசிலாந்துக்குள் எப்படி நுழைந்தான் என்ற தகவல் தெரியவில்லை,'' என்றார்.
துப்பாக்கி சூடு நடந்த லின்வுட் மசூதி இமாம், இப்ராஹிம் அப்துல் ஹலீம் கூறுகையில், ''இப்போதும் நாங்கள், இந்த நாட்டை நேசிக்கிறோம். நியூசிலாந்து மக்கள், எங்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் தந்துள்ளனர். முஸ்லிம் அல்லாத பலரும், எங்களை கட்டியணைத்து ஆறுதல் அளித்து வருகின்றனர்,'' என்றார்.
நியூசிலாந்தில், 1989 முதல், துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு கொடூர குற்றமாக இருந்தாலும், அதிகபட்சமாக, வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் தான், அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6 இந்தியர்கள் மாயம்

நியூசிலாந்தில் உள்ள இந்திய துாதரக உயர் அதிகாரி கூறியதாவது:துப்பாக்கிச் சூட்டுக்கு பின், ஏழு இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவரின் நிலை தெரியாமல் இருந்தது. அவர்களது குடும்பத்தினருடன் பேசி வந்தோம். இதில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை சேர்ந்த முகமது பர்கஜ் ஹசன், என்பவர் இறந்து விட்டது தெரிய வந்தது. காயம் அடைந்த இரண்டு இந்தியர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்களை தேடி வருகிறோம்.இவர்களில் ஒருவர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்த, அகமது இக்பால் ஜஹாங்கீர் என, தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் ஆறுதல்

நியூசிலாந்தில் ஆண்டுக்கு, 50 கொலைகள் கூட நடக்காது. இப்படிப்பட்ட அமைதியான நாட்டில், 49 பேர் கொல்லப்பட்டது, அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின், தெருவில் நடந்து செல்வதற்கு கூட, முஸ்லிம்களிடையே பீதி நிலவுகிறது. அவர்களது தோள்களில் கையை போட்டு, நியூசிலாந்து மக்களே, தேவையான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு உட்பட பல்வேறு வசதிகளை செய்து தருகின்றனர்.சம்பவம் நடந்த அல் நுார் மசூதி அருகே, தற்காலிக நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மலர் வளையங்களை வைத்து, நியூசிலாந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூலக்கதை