ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோர் பெற நடவடிக்கை

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோர் பெற நடவடிக்கை

கோல்கட்டா: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பொருட்களின் விலையை குறைத்தோ அல்லது அளவை அதிகரித்தோ, ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோருக்கு வழங்க, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமான, என்.ஏ.ஏ., அனுமதி வழங்கியுள்ளது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல் அறிமுகமானது. இதன் மூலம், பல முனை வரிகள் ஒழிந்து, நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்த முறையில், தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறுகின்றன.அவ்வாறு பெறும் ஆதாயத்தின் அடிப்படையில், அவை தயாரிக்கும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.அவ்வாறு குறைக்காமல், பழைய விலையிலேயே பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது, என்.ஏ.ஏ., சட்ட நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கிறது.


இந்நிலையில், என்.ஏ.ஏ., தலைவர், பி.என்.சர்மா கூறியதாவது:இருநுாறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. அதன் பயனை, தயாரிப்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். ஆனால், ஷாம்பூ போன்ற சிறிய, ‘சாஷே’க்களில் அடைத்து விற்கப்படும், குறைந்த விலை பொருட்களில், இதை நடைமுறைப்படுத்துவது கடினம்.அதனால், பொருட்கள் அளவை அதிகரித்துக்கொள்ள, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட பின், அதன் பயன், நுகர்வோரை சென்றடைகிறதா என்பதை, மூன்று அளவுகோல்களின் அடிப்படையில், ஆணையம் கண்காணித்து வருகிறது.அதன்படி, வரி குறைக்கப்பட்ட பின் கிடைத்த பயனுக்கு ஏற்ப, பொருட்கள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதா என, ஆராயப்படுகிறது.


வரி குறைப்பு பயனை, நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் கண்காணிக்கப்படுகிறது. நிறுவனம், நுகர்வோருக்கு அளிக்கும் கூடுதல் சலுகைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை