‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு ஆலோசனை அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு ஆலோசனை அதிகாரிகள்

‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கான, நோடல் அதிகாரிகளாக, 15க்கும் மேற்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு சார்பில், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன் வழியாக, 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.


மாநாட்டில் புரிந்துணர்வு செய்த நிறுவனங்கள் தொழில் துவங்க, அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தமிழக அரசு நியமித்துள்ளது. தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


ஜிம் – 2 மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்கள் விரைவில் தொழில் துவங்குவதற்கு, தேவையான வசதிகளையும், அவர்கள் தொடர்பு கொள்வதற்கான அதிகாரிகளையும், தமிழக அரசு நியமித்துள்ளது.


இதில், ராஜேஷ் லக்கானி, சபிதா, நஜுமுதீன், கிருஷ்ணா உட்பட, 15க்கும் மேற்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும், 5, 9, 10 என, நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி, விரைவில் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை