புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்:தீர்வு காண தவறினால் வரும் தலைமுறை பாதிக்கும்

தினமலர்  தினமலர்
புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்:தீர்வு காண தவறினால் வரும் தலைமுறை பாதிக்கும்

புதுடில்லி:‘‘வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடனடி தீர்வு காண தவறினால், நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் எச்சரித்துள்ளார்.


அவர், அமித் கபூர், சிரக் யாதவ் எழுதிய, ‘விழிக்கும் காலம் – சுதந்திரம் முதல் இந்திய பொருளாதாரத்தின் கதை’ என்ற நுாலுக்கு முடிவுரை வழங்கியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:பெருகி வரும் இளைய சமுதாயமும், அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களும், இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன.


மக்கள் தொகை


இந்திய மக்கள் தொகையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், 25 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அதனால், ஆண்டுதோறும், இந்தியாவில், உழைப்பாளிகள் பிரிவில் இணைவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.


மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, நம் நாட்டில், ஆண்டுதோறும், ஒரு கோடிக்கும் அதிகமானோர், தொழில் புரிவதற்கு தகுதியுடைய வயதினர் பிரிவில் இணைகின்றனர்.உலக மக்கள் தொகையை பொறுத்தவரை, தொழில் புரியும் தகுதியை பெற்றோர் வயது, 15 – -64 ஆக உள்ளது. இது, 2050ம் ஆண்டு வரை விரிவடைந்து வரும் என, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.


இந்த அளவிற்கு, மக்கள் தொகையில், தொழில் புரியும் தகுதி படைத்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.இல்லையெனில், இந்தியா, பரவலான இளைய சமுதாயத்தினால் கிடைக்கக் கூடிய அளவிட முடியாத பயன்களை இழக்க நேரிடும். பெருகி வரும் இளையோருக்கு ஏற்ப, வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், அது, வருங்கால சந்ததியினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


‘ஆட்டோமேஷன்’


‘தொழிற்சாலைகளில், மனித, ‘ரோபோ’க்கள் தயாரிப்பு பணியை மேற்கொண்டால், வளரும் நாடுகளில், மூன்றில் இரு பங்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும்’ என, ஐ.நா.,வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.‘ஆட்டோமேஷன்’ எனப்படும், தன்னிச்சையாக பணிகளை செய்யும் சாப்ட்வேர் தொழில்நுட்பமும், மிக வலிமையான இளையோர் படையும், இந்தியாவிற்கு உள்ள, இரு பெரும் சவால்கள் எனலாம்.


இந்த சவால்களை திறம்பட கையாண்டு, நவீன தொழில்நுட்பங்களால் பறிபோகும் வேலைவாய்ப்புகளுக்கு இணையாக, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதில், ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.


அதனால், இந்தியா, கடந்த கால அனுபவத்தில் இருந்து, நிகழ்கால சவால்களை உடனடியாக சமாளிக்கும் கட்டாயத்தில் உள்ளது. தீர்வு காண முடியாத அளவிற்கு நிலைமை முற்றுவதற்கு முன், நெருக்கடியை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருளாதார வளர்ச்சி



கிழக்கு ஆசிய சந்தைகள், தாராளமயமாக்கல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, பெரும் பயனை அடையத் துவங்கியபோது, அதை இந்தியாவும் பின்பற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம், முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

அமிதாப் காந்த்

தலைமை செயல் அதிகாரி, ‘நிடி ஆயோக்’

மூலக்கதை