நேரடி வரி வருவாய் இலக்கு எட்டப்படுமா?முன்கூட்டிய வரி வசூலிப்பில் அரசு தீவிரம்

தினமலர்  தினமலர்
நேரடி வரி வருவாய் இலக்கு எட்டப்படுமா?முன்கூட்டிய வரி வசூலிப்பில் அரசு தீவிரம்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் குறைந்துள்ளதால், நிர்ணயித்த இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஒரு நிறுவனம் அல்லது தனி நபர் ஈட்டும் வருவாய் அடிப்படையில் செலுத்தும் வரி, நேரடி வரி எனப்படுகிறது.இந்த வகையில், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 11.50 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இது, கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.


ஆனால், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், 7.89 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தான், வரி வசூலாகியுள்ளது.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி வசூல் குறைவாக உள்ளதால், சமீபத்தில், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பி.சி.மோடி தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.


அதில், நடப்பு நிதியாண்டின், நான்காம் காலாண்டிற்கு, நிறுவனங்களின் முன்கூட்டிய வரி வசூல் நடவடிக்கையை முடுக்கி விட முடிவு செய்யப்பட்டது.அத்துடன், குறிப்பிட்ட வரம்பின் கீழ் வரும், வரி செலுத்துவோர் அனைவருக்கும், முன்கூட்டிய வரியை விரைந்து செலுத்துமாறு கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.


அதன்படி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் மாத ஊதியம் பெறுவோருக்கு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள், கடைசி தவணை என்பதால், அதிக அளவில் முன்கூட்டிய வரி செலுத்தி, அடுத்த நிதியாண்டில், கழிவு போக எஞ்சிய தொகையை திரும்பப் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், வரி வசூல் இலக்கிற்கும், திரட்டப்படும் தொகைக்கும் உள்ள இடைவெளி குறைவாகவே இருக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


மறைமுக வரி வசூல்



நடப்பு நிதியாண்டில், சுங்கம், ஜி.எஸ்.டி., ஆகிய மறைமுக வரிகள் மூலம், 7.43 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மத்திய இடைக்கால பட்ஜெட்டில், மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதன்படி, சுங்க வரி வசூல் இலக்கு, 1.12 லட்சம் கோடியில் இருந்து, 1.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு, 7.43 லட்சம் கோடியில் இருந்து, 6.43 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., 7.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை