நியூசி., துப்பாக்கிச்சூடு : 9 இந்தியர்கள் மாயம்

தினமலர்  தினமலர்
நியூசி., துப்பாக்கிச்சூடு : 9 இந்தியர்கள் மாயம்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 9 இந்தியர்கள் மாயமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு:


நியுசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் 2 மசூதிகளில் நேற்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது 49 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக போலீசார் இதுவரை ஒரு பெண் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற 28 வயதான இளைஞன் தான் துப்பாக்கியால் சுட்டவன் எனக் கூறப்படுகிறது.

பழிக்குப் பழி செயல்:


மதத் தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்குப் பழிக்குப் பழி வாங்கவே மசூதிகளில் துப்பாக்கியால் சுட்டதாக, விசாரணையின் போது குற்றவாளி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் நிரம்பிய இரண்டு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

9 பேர் மாயம்:


இந்த சம்பவத்திற்குப் பின் 9 இந்தியர்கள் மாயமாகிவிட்டதாக நியூசிலாந்திற்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார். அவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ, வம்சாவளியினராகவோ இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஓட்டல் நடத்தி வரும் ஜஹாங்கிர் என்பவர் படுகாயமடைந்ததாக ஐதராபாத்தில் உள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆமதாபாத்தைச் சேர்ந்த கோக்கார் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் இந்தியர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை