மசூதிக்குள் வெள்ளையின தீவிரவாதியின் வெறியாட்டம்! உலக நாட்டுத் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
மசூதிக்குள் வெள்ளையின தீவிரவாதியின் வெறியாட்டம்! உலக நாட்டுத் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

நியுசிலாந்தின் கிரைஸ்சேர்ஜ் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளார்கள். 
 
நியுசிலாந்தின் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற தாக்குதல் மிக மோசமான படுகொலைச் சம்பவங்களாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
நியுசிலாந்து மக்களுடன் அமெரிக்கா தோள்கொடுத்து செயற்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். 
 
கிரைஸ்சேர்ஜில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் பற்றி ஆழ்ந்த கவலையடைவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். 
 
அதேவேளை, பிரித்தானியாவின் அரச குடும்பமும் சம்பவம் பற்றி ஆழ்ந்த அனுதாபம் வெளியிட்டிருக்கிறது. கிரைஸ்சேர்ஜில் இடம்பெற்ற சம்பவம் பற்றி ஆழ்ந்த கவலையடைவதாக பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார் அறிவித்துள்ளார். 
 
அறிவீனமாக செயற்படும் இவ்வாறான வன்முறைகளால் உயிரிழப்புக்களும், காயங்களும் மாத்திரமே ஏற்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அமைதியான முறையில் பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நியுசிலாந்து பிரஜைகள் இனவாதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்கள் பற்றி ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாகவும் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். 
 
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். தாக்குதலை மோசமான சம்பவம் என்று வர்ணித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி அனைத்து வகையிலான தீவிரவாத செயற்பாடுகளையும் எதிர்ப்பதாக அறிவித்துள்ளார். 
 
நியுசிலாந்தின் கிரைஸ்சேர்ஜ் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 வரை அதிகரித்திருக்கிறது. 
 
நியுசிலாந்தின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்தத் தினம் நியுசிலாந்தின் வரலாற்றில் கறைபடிந்த நாளாக வரலாற்றில் இடம்பெறும் என்று நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடென் தெரிவித்துள்ளார்.
 
பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய வீடியோ காணொளியை நீக்கியிருப்பதாக பேஸ் புக் சமூக வலைத்தளம் அறிவித்திருக்கிறது. கொலையாளி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரடியாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பியிருந்தார். 
 
தாக்குதலை நடத்திய 4 பேர் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெண் ஒருவரும் அடங்குகிறார். அன்நூர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நபர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்படுகிறது. 
 
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தீவிரவாதி என அடையாளப்படுத்தியுள்ளார். கொலையாளி தீவிர வலதுசாரி பயங்கரவாதி எனவும் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்திருக்கிறார்.  
 
இதேவேளை பிரதான கொலையாளி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை