திருப்பூரில் இன்று சம்பளம் பட்டுவாடா...கவனம் தேவை!உரிய ஆவணம் வைத்திருக்க 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
திருப்பூரில் இன்று சம்பளம் பட்டுவாடா...கவனம் தேவை!உரிய ஆவணம் வைத்திருக்க அட்வைஸ்

திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலாளருக்கு வாரச்சம்பளம் இன்று பட்டுவாடா செய்யப்படுகிறது. சம்பளம் வழங்க கொண்டு செல்லும் தொகைக்கு, நிறுவனத்தினர், உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில், பனியன் தொழிலாளர்களுக்கு, வாரம் தோறும் சனிக்கிழமை சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பெரும்பாலான குறு, சிறு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சம்பள தொகையை, ரொக்கமாகவே, தொழிலாளருக்கு வழங்குகின்றன. சம்பளம் வழங்குவதற்காக, வங்கிகளிலிருந்து, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை எடுக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுத்து செல்வோர், உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.இன்று, பனியன் தொழிலாளருக்கு சம்பள நாள். மாலையில் சம்பளம் வழங்க ஏதுவாக, காலையில், வங்கிகளில் இருந்து, நிறுவனத்தினர், தொகை பெறுவது வழக்கம். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லும் தொகையை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, சம்பளம் வழங்க எடுத்துச்செல்லும் தொகைக்கு உரிய ஆவணங்களை, ஆயத்த ஆடை துறையினர் வைத்திருக்கவேண்டும். எந்த வங்கியிலிருந்து எவ்வளவு தொகை, எந்த நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது; அந்த தொகை, தொழிலாளருக்கு வழங்க எடுத்துச்செல்வதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வைத்திருப்பது அவசியம். இதுகுறித்து, பனியன் அமைப்புகளும், தங்கள் உறுப்பினர் நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தல் கடிதம் அனுப்பிவைத்துள்ளன.
வங்கி மேலாளர் அறிவுறுத்தல்மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:தொழில் நிறுவனங்கள், சம்பளம் வழங்க, இதர செலவினங்களுக்காக, வங்கியிலிருந்து எடுத்துச்செல்லும் தொகைக்கு உரிய ஆவணம் வைத்திருக்கவேண்டும்.என்ன காரணத்துக்காக; எவ்வளவு தொகை, எந்த வங்கியிலிருந்து, எத்தனை மணிக்கு எடுக்கப்படுகிறது என்கிற விவரங்களை குறிப்பிட்டு, கணக்குவைத்துள்ள வங்கி அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வைத்துக்கொள்ளவேண்டும்.
கூடுதல் ஆவணமாக, பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் செக் நகலையும் வைத்திருக்கலாம்.குறிப்பிட்ட வாடிக்கையாளரின் கடந்த காலபரிவர்த்தனை செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட வங்கியாளர்களுக்கு நன்கு தெரியும். வழக்கத்துக்கு மாறாக அதிக தொகை எடுக்கப்பட்டோலோ, செலுத்தப்பட்டாலோ, அத்தகைய கணக்கு கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை