உக்கடம், செல்வபுரம் மக்களுக்கு இலவசம்!பாதாள சாக்கடை இணைப்பு!

தினமலர்  தினமலர்
உக்கடம், செல்வபுரம் மக்களுக்கு இலவசம்!பாதாள சாக்கடை இணைப்பு!

கோவை:கோவை உக்கடம், செல்வபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பை இப்போதைக்கு இலவசமாக வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் சிலர் வீட்டுக்கு வீடு பண வசூலில் இறங்கியுள்ளதால், இப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில், நாளொன்றுக்கு, 7 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டது. ஆனால், 3 கோடி லிட்டர் கழிவு நீரே, தற்போது சுத்திகரிக்கப்படுகிறது.உக்கடம், கோட்டைமேடு, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ளனர்.இணைப்பு பெறுவதற்கு வைப்புத்தொகை, விண்ணப்பத்தொகை, ரோட்டை தோண்டி குழாய் பதிக்க, 'சென்டேஜ்' கட்டணம் என, பல ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதால், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இதன் காரணமாக, இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், உக்கடம் பெரிய குளத்தில் சேகரமாகிறது.இதை தவிர்க்க, உக்கடம், செல்வபுரம், வாலாங்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்கு, இலவசமாக இணைப்பு கொடுத்து, சுத்திகரிப்பு மையத்துக்கு கழிவு நீரை கொண்டு செல்ல, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தில், வீடு, வீடாகச் சென்று பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், இலவசமாக இணைப்பு கொடுக்காமல், வசிப்பவர்களின் வசதியை பார்த்து, ஒப்பந்ததாரர்கள், ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான தொகை, வரி செலுத்தும்போது, 10 தவணையாக பிரித்து வசூலிக்கப்படும்.
தற்போது பணம் செலுத்த வேண்டியதில்லை. யாரேனும் பணம் கேட்டால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.'வசதிக்கேற்ப வசூல்!'இ.கம்யூ., முன்னாள் கவுன்சிலர் கல்யாணசுந்தரம் கூறுகையில், ''விண்ணப்பமே பெறாமல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. வீட்டில் வசிப்பவர்களின் வசதிக்கேற்ப தொகை கேட்பதால், சந்தேகம் எழுகிறது. பணம் பெறுபவர்கள், மாநகராட்சி பெயரில் ரசீதும் தருவதில்லை. இவ்விஷயத்தில் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். மாநகராட்சி தெளிவாக அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை