இந்திய-அமெரிக்கர் நியோமி ராவ் நீதிபதியாவதை உறுதி செய்தது அமெரிக்க செனட்

தினகரன்  தினகரன்
இந்தியஅமெரிக்கர் நியோமி ராவ் நீதிபதியாவதை உறுதி செய்தது அமெரிக்க செனட்

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர் நியோமி ராவ், நீதிபதியாவதை அமெரிக்க செனட் நேற்று உறுதி செய்தது. அமெரிக்காவில் நீண்ட காலமாக சட்ட பணியில் இருப்பவர் இந்திய அமெரிக்கர் நியோமி ராவ்(45). அமெரிக்காவின் ஜார்ஜ் மாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள சட்ட பள்ளியில் பேராசிரியையாக பணியாற்றிய இவர், அமெரிக்க சட்டத்த்துறையின் மூன்று முக்கிய பிரிவுகளில் வக்கீலாகவும் பணியாற்றியுள்ளார்.  முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்க்கு, சிறப்பு சட்ட உதவியாளராக இவர் பணியாற்றியுள்ளார். தற்போது தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலகத்தின் நிர்வாகியாக பணியாற்றுகிறார். இவர் அமெரிக்காவின் டி.சி சர்க்கியூட் அப்பீல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இந்த நீதிமன்றம் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரமிக்க நீதிமன்றம். இவரை மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் இவர் பாலியியல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் சிறுபான்மையினர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை இதற்கு முன் எழுதியிதிருந்தார். இந்நிலையில் இவரை நீதிபதியாக நியமிப்பது குறித்த ஓட்டெடுப்பு அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்தது. 100 உறுப்பினர்கள் கொண்ட இந்த அவையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. இங்கு நடந்த ஓட்டெடுப்பில் நியோமி ராவுக்கு ஆதரவாக 53 ஓட்டுக்களும், எதிராக 46 ஓட்டுக்களும் பதிவாகின. இதன் மூலம் நியோமி ராவ் நியமனத்தை அமெரிக்க செனட் உறுதி செய்துள்ளது. இவர் நீதிபதியாக பதவியேற்றால், மேல்முறையீடு நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கும் 2வது இந்திய அமெரிக்கராக இருப்பார்.

மூலக்கதை