இந்தியாவில் 6 அணு உலைகள் அமைக்க அமெரிக்கா சம்மதம்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் 6 அணு உலைகள் அமைக்க அமெரிக்கா சம்மதம்

வாஷிங்டன்: இந்தியாவில் 6 அணு உலைகள் அமைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2008ம் ஆண்டு கையெழுத்தானது. அப்போது முதல் இரு நாடுகள் இடையே உறவு வலுவடையத் தொடங்கியது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம், அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பு(என்.எஸ்.ஜி) இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு அளித்தது. இதையடுத்து பிரான்ஸ், ரஷ்யா, கனடா, அர்ஜென்டினா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், வியட்நாம், தென்கொரியா, கஜகஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 9வது கட்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்கா ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரிவின் இணைச் செயலாளர் ஆன்ட்ரியா தாம்ஸன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உலக நாடுகளின் பாதுகாப்பு, அணு ஆயுத பரவலில் உள்ள சவால்கள், விண்வெளியில் உள்ள அச்சுறுத்தல் ஆகியவை குறித்து அவர்கள் பேசினர்.  கட்டுப்பாடு இல்லாத நாடுகள் மற்றும் தீவிரவாதிகளின் கையில் பேரழிவு ஆயுதங்கள் செல்வதை தடுக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.  இந்த கூட்டத்தில் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது.தீவிரவாதிகள் மீது நடவடிக்கை:அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை சந்தித்து பேசினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்கும் வகையில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக் கூடாது எனவும், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் எனவும் விஜய் கோகலேவும், ஜான் போல்டனும் வலியுறுத்தினர்’’ என தெரிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா 4வது முறையாக தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை