‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம்

தினமலர்  தினமலர்
‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம்

பெங்களுரு:‘விப்ரோ’ நிறுவன தலைவர், அசிம் பிரேம்ஜி, சமூக நல முன்னேற்ற திட்டங்களுக்கு, மேலும், 52 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துஉள்ளார்.


இதையடுத்து இவர், பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கிய தொகை, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, டாலர் மதிப்பில், 2,100 கோடி.இதன் மூலம், உலகளவில், சமூக மேம்பாட்டிற்காக பெருந்தொகை ஒதுக்குவோரில் வெகுசிலரில் ஒருவராக, அசிம் பிரேம்ஜி இடம் பிடித்துள்ளார்.


உலகளவில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்சின் அறக்கட்டளை, 4,000 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது. போர்டு அறக்கட்டளை, 1,200 கோடி டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, சமூக நல முன்னேற்ற திட்டங்களுக்காக அளித்த நிதியுதவியை விட, தற்போது மிகக் குறைவாகவே நிதி ஒதுக்குகின்றன.இந்நிலையில், அசிம் பிரேம்ஜி, மிகப் பெருந்தொகையை சமூக முன்னேற்றத்திற்காக வழங்குபவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.


குடும்பம்


செல்வந்தர்கள், தங்கள் சொத்தில், 50 சதவீதத்தை, சமூக நலனுக்கு ஒதுக்கும், டி.ஜி.பி., திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் துவக்கினர். இதில், முதலில் இணைந்த இந்தியர் என்ற பெருமையும் அசிம் பிரேம்ஜிக்கு உண்டு.


இவர் குடும்பத்திடம், விப்ரோவின், 74 சதவீத பங்குகள் உள்ளன. எனினும், இப்பங்குகளில், அதிகபட்சமாக, 7 சதவீதம் மூலம் கிடைக்கும் ஆதாயம் தான், பிரேம்ஜியின் இரு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கிறது.


இந்தியாவில், இதர நிறுவனங்களில், பங்குகள் மூலம், நிறுவனர்கள் பெறும் ஆதாயத்தை ஒப்பிடும் போது, அசிம் பிரேம்ஜி குடும்பத்திற்கு வருவாய் குறைவாகவே கிடைக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி குடும்பத்திற்கு, அவர்கள் வைத்துள்ள பங்குகளின் அடிப்படையில், முழு ஓட்டுரிமை உள்ளது.அசிம் பிரேம்ஜி, 67 சதவீத விப்ரோ பங்குகளில், பங்கு விற்பனை, டிவிடெண்டு போன்றவற்றின் மூலம் கிடைக்கும் அனைத்து நிதி ஆதாயத்தையும், அறக்கட்டளைக்கு வழங்குகிறார்.


தொண்டு நிறுவனம்


அவர், தற்போது அறிவித்திருக்கும் நன்கொடை, 37 சதவீத விப்ரோ பங்குகள் மூலம் கிடைக்கும் நிதி ஆதாயத்தில் வழங்கப்படுகிறது.அறக்கட்டளை மூலம், நாடு முழுவதும் உள்ள, பொருளாதாரத்தில் நலிவுற்ற சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.கல்வி மையங்களை ஏற்படுத்துவது, மாணவர் ஊக்கத் தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களுக்கு அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை நிதியுதவி அளிக்கிறது.


இப்பணிகள், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.லாபத்தில் பெரும்பங்கு ஒதுக்கீடுஅசிம் பிரேம்ஜி ஈட்டும், ஒவ்வொரு டாலர் லாபத்திலும், 67 சதவீதம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.


அவர் நிதியுதவியில், கர்நாடகா, உத்தரகண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அனுராக் பெஹர்

தலைமை செயல் அதிகாரி,

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை

மூலக்கதை