மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 2.76 சதவீதம்; 2018, பிப்ரவரியில், 2.74 சதவீதமாக இருந்தது.


வெங்காயம், உருளை, பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இப்பொருட்களின் பணவீக்கம், பிப்ரவரியில், 4.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 3.54 சதவீதமாக குறைந்து இருந்தது.இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் மொத்த விலை பணவீக்கம், 1.85 சதவீதத்தில் இருந்து, 2.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.


ரிசர்வ் வங்கி, மொத்த விலை பணவீக்கத்தின் அடிப்படையில், நிதிக் கொள்கையை உருவாக்குவதில்லை. சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் தான்,நிதிக் கொள்கையை வெளியிடுகிறது.சில்லரை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, பிப்ரவரியில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை