‘இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு ரூ.22.94 லட்சம் கோடியை எட்டும்

தினமலர்  தினமலர்
‘இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு ரூ.22.94 லட்சம் கோடியை எட்டும்

சென்னை:‘‘இந்திய ஏற்றுமதியின் மதிப்பு, நடப்பு ஆண்டில், 22.94 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என, மத்திய வர்த்தக துறை செயலர், அனுப் வாத்வான் தெரிவித்தார்.இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், மூன்று நாள் பொறியியல் கண்காட்சி, சென்னையில் நேற்று துவங்கியது.


மலேஷியா



கண்காட்சியை, மத்திய வர்த்தக துறை செயலர், அனுப் வாத்வான் துவக்கி வைத்து பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார பங்குதாரர் நாடுகளில், மலேஷியா மிக முக்கியமான நாடு. மலேஷியா உடன், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், சில குறிப்பிட்ட இன்ஜினியரிங் பொருட்கள், வேறு நாடுகளில் கிடைப்பதில்லை. இது போன்ற சில பொருட்களை, வேறு நாடுகள் உற்பத்தி செய்யவும் முடியாது. கடந்த, 2013 – 14ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு, 21.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இது, 2018 – 19ம் ஆண்டில், 22.94 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவே, இந்திய ஏற்றுமதியில் சாதனை அளவாகும்.


இந்த ஏற்றுமதியில், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில், இன்ஜினியரிங் துறை, 5 சதவீதம் பங்களிப்பு வழங்குகிறது.இந்திய ஏற்றுமதியில், 25 சதவீதம் இன்ஜினியரிங் பொருட்கள் பங்கு வகிக்கின்றன. 2025ம் ஆண்டில் இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியை, 13.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.


நடவடிக்கை


இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை அதிகமாக இருப்பதாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியின் போது, இந்தியா – மலேஷியா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. மேலும், 2025ம் ஆண்டில், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியை, 13.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கான உத்திகள் தொடர்பான நுாலும் வெளியிடப்பட்டது.

மூலக்கதை