நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க.-கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

PARIS TAMIL  PARIS TAMIL
நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 தொகுதிகள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்கள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்கீடு செய்வது? என்பது குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பேச்சுவார்த்தை

காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டதால் மீதம் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. திருச்சி, கரூர் ஆகிய 2 தொகுதிகளை தி.மு.க.வும், காங்கிரசும் கேட்டதால் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்ததால் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பட்டியல் பங்கீடு பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை நேற்று மாலை சந்தித்து பேசினர்.

9 தொகுதிகள்

அப்போது திருச்சி, கரூர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க தி.மு.க. தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தொகுதி பட்டியலில் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர்(தனி), திருச்சி, கரூர், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இன்று வெளியீடு

ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இனிமையான முறையில் முடிந்திருக்கிறது. இந்த உடன்படிக்கையில் தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்று இருக்கிறோம். யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து தி.மு.க. தலைமை நாளை(இன்று) அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணியளவில், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் தொகுதிகள் பட்டியலை வெளியிட உள்ளார்.

அதன்பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானவுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற 18 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

மூலக்கதை