கட்டாயம் ஓட்டுப்போடுங்க. மம்மி... டாடி! 100 சதவீத பதிவுக்கு புது திட்டம்!

தினமலர்  தினமலர்
கட்டாயம் ஓட்டுப்போடுங்க. மம்மி... டாடி! 100 சதவீத பதிவுக்கு புது திட்டம்!

கோவை:ஓட்டுப்பதிவை, 100 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன், விழிப்புணர்வு பணிகள், கோவை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கட்டாயம் ஓட்டுப்போடுமாறு பெற்றோருக்கு, பள்ளி மாணவர்கள் வலியுறுத்தும் புது திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், 'ஸ்வீப்' என்ற பெயரில், தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது:நாட்டில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்யவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் அனைவரும் ஓட்டளிக்கவும், 'ஸ்வீப்' எனப்படும் வாக்காளர் கல்வி விழிப்புணர்வுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளங்களில் இருக்கும் படங்கள், போஸ்டர்களை பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள், தங்கள் பெயருடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்கலாம். கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டி நடத்தலாம்.100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள், வேலை செய்யும் இடத்தில், உறுதிமொழி ஏற்பது போன்ற நிகழ்ச்சி நடத்தலாம். கட்டாயம் ஓட்டளிப்பதாக, பெற்றோரிடம், பள்ளி மாணவர்கள் உறுதி மொழி கடிதம் வாங்கி, பள்ளியில் ஒப்படைப்பது போன்று ஏற்பாடு செய்யலாம்.சேலம் மாவட்டத்தில், இதுபோன்று செய்துள்ளனர். அதேபோல, கோவை மாவட்டத்திலும் செய்வதற்கு, கல்வித்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சிறப்பு டி.ஆர்.ஓ., கோவிந்தராஜூலு பேசியதாவது:மாணவர்களை இந்திய வரைபட வடிவில் நிற்க வைத்தும், 100 சதவீதம் வடிவில் நிற்க வைத்தும், போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட்டால், பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படும்.100 சதவீதம் ஓட்டுப்பதிவு பற்றி விளக்குவதுடன், சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றியும், 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாட்டு, நாடகம், பேரணி, சைக்கிள் பேரணி, கோலம், ஓவியப்போட்டி நடத்தலாம்.கோவை மாவட்டத்தில், 1800 425 4757 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் புகார் இருந்தால், இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு, கோவிந்தராஜூலு பேசினார்.தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோக்கள், போஸ்டர்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள், வருவாய், கல்வித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என வெவ்வேறு அரசு துறை அதிகாரிகள், ஓட்டல் சங்கத்தினர், சமையல் காஸ் டீலர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கோவை மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.பால் பாக்கெட்டில் விழிப்புணர்வுஆவின் பால் பாக்கெட்டுகளிலும், தேர்தல் விழிப்புணர்வு விளம்பரம் செய்வது பற்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களிடம், 'பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் சேனல்களில் நீங்கள் தயார் செய்யும் படங்கள், குறும்படங்கள், வீடியோக்கள் 'அப்லோடு' செய்யப்படும். அந்த சமூக வலைதள பக்கங்கள், தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன' என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை