வடக்கு தொகுதி வாக்காளரை கவர... துடிப்பு!அரசியல் கட்சியினர் மும்முரம்

தினமலர்  தினமலர்
வடக்கு தொகுதி வாக்காளரை கவர... துடிப்பு!அரசியல் கட்சியினர் மும்முரம்

திருப்பூர்:திருப்பூர் வடக்கு தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த, கட்சியினர் தயாராகி வருகின்றனர்.திருப்பூர் லோக்சபாவில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளது.
இதில், திருப்பூர் வடக்கு தொகுதி, 362 ஓட்டுச்சாவடி மையங்களை கொண்ட பெரிய தொகுதி.ஆறு தொகுதியில், அதிகபட்சமாக இந்த தொகுதியில், 1.78 லட்சம் ஆண்கள், 1.69 லட்சம் பெண்கள், 85 திருநங்கையர் என, 3.48 லட்சம் வாக்காளர் உள்ளனர்.மற்ற ஐந்து தொகுதிகளை விட, ஒரு லட்சம் ஓட்டுக்கள் கூடுதலாக உள்ளதால், திருப்பூரில் போட்டியிடும், வேட்பாளர்கள் வடக்கு தொகுதியின் மீது கூடுதல் கவனம் செலுத்துவர்.பரந்து விரிந்து இந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் கிராமங்களாக உள்ளது.
எனவே, பட்டிதொட்டியெல்லாம் தவறாமல் பிரசாரம் செய்தால் மட்டுமே, வெற்றியை நெருங்க முடியும் என்பதால், வடக்கு தொகுதி வாக்காளர்களை கவர்வது 'டாலர் சிட்டி' யில் போட்டியிடும் வேட்பாளர் முதல் கணக்காக உள்ளது.
இது குறித்து, அரசியல் நோக்கர்கள் கூறுகையில், 'திருப்பூர் எம்.பி., தொகுதியை பொறுத்தவரை, பிற பகுதியில் பிரசாரம் செய்தாலும் முக்கிய தலைவர், பேச்சாளர் வரும் போது பொதுக்கூட்டம், வாகன பிரசாரத்தை வடக்கு தொகுதியை மையமாக கொண்டு நடத்துவது வழக்கம். அந்த நடைமுறை, வரும் லோக்சபா தேர்தலிலும் தொடரும்,' என்றனர்.

மூலக்கதை